பழனி முருகன் கோவிலில் கும்பாபிஷேக பணிகள் தீவிரம்

பழனி முருகன் கோவிலில் கோபுரம் மற்றும் ராஜகோபுரத்தில் சாரம் அமைத்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.

Update: 2020-07-09 00:10 GMT
பழனி, 

அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடாக விளங்குவது பழனி முருகன் கோவில். இங்கு தமிழகம் மட்டுமின்றி கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட வெளிமாநில பக்தர்கள் மற்றும் வெளிநாட்டினர் ஏராளமானவர்கள் தினமும் சாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இந்த கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. ஆமக விதிப்படி 2018-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற வேண்டும். ஆனால் அது தாமதமானதால் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து கடந்த ஆண்டு நவம்பர் மாதம் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்வதற்காக பாலாலய பூஜைகள் நடந்தது. அதை தொடர்ந்து ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் பணிகள் நிறுத்தப்பட்டது. கடந்த மாதம் ஊரடங்கில் சில கட்டுப்பாடுகளுடன் தளர்வு விதிக்கப்பட்டதால் கும்பாபிஷேக பணிகள் மேற்கொள்ள அரசு உத்தரவிட்டது.

இதனை தொடர்ந்து பழனி கோவில் கோபுரம் மற்றும் ராஜகோபுரத்தில் சாரம் அமைத்து கும்பாபிஷேக பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது. இதையொட்டி ராஜகோபுரத்தில் இருந்த சிகப்பு நிறத்தில் மின்விளக்குகளால் ஒளிரும் வேல் அகற்றப்பட்டது. கோபுரத்தில் பராமரிப்பு பணி முடிந்ததும் அந்த வேல் மீண்டும் பொருத்தப்பட உள்ளது.

மேலும் செய்திகள்