சேலம் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா: பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,409 ஆக உயர்வு
சேலம் மாவட்டத்தில் மேலும் 68 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.;
சேலம்,
சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதை கட்டுப்படுத்த மாவட்ட நிர்வாகம் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரசுக்கு இதுவரை 5 பேர் பலியாகி உள்ளனர். நேற்று முன்தினம் கொரோனாவால் 52 பேர் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று 68 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது.
அதாவது, சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் 40 பேர், மேட்டூர், ஆத்தூர் பகுதிகளில் தலா 4 பேர், நங்கவள்ளி பகுதியில் 7 பேர், காடையாம்பட்டியில் 2 பேர், வீரபாண்டி ,எடப்பாடி சங்ககிரி, தாரமங்கலம், கெங்கவல்லி ஆகிய பகுதிகளை சேர்ந்த தலா ஒருவர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இது தவிர திருப்பூர், காஞ்சீபுரம் ஆகிய மாவட்டங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவர், உத்தரபிரதேசம், ஆந்திரா, ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து சேலம் வந்த தலா ஒருவர் மற்றும் நைஜீரியா நாட்டிலிருந்து சேலம் வந்த ஒருவரும் கொரோனா தொற்றுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,409 ஆக உயர்ந்துள்ளது.
இதனிடையே சேலம் அரசு ஆஸ்பத்திரியில் உள்ள தனிமை வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 6 பெண்கள் உள்பட 12 பேர் குணமடைந்து விட்டதால் நேற்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர்.