பெரியபாளையம் அருகே விபத்து கார், மினிவேன் மீது லாரி மோதல்; ஒருவர் பலி 3 பேர் படுகாயம்

பெரியபாளையம் அருகே சாலையில் சென்ற சரக்கு லாரி நிலைத்தடுமாறி எதிரே சென்ற கார் மற்றும் மினிவேன் மீது மோதி விபத்துக்குள்ளானதில், ஒருவர் பலியானார். 3 பேர் படுகாயமடைந்தனர்.;

Update: 2020-07-08 22:59 GMT
பெரியபாளையம்,

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே வடமதுரை ஊராட்சியில் உள்ள எம்.டி.சி. நகர் அருகே பெரியபாளையம்வெங்கல் நெடுஞ்சாலை உள்ளது. இந்த சாலையில் பெரியபாளையத்தில் இருந்து வெங்கல் நோக்கி கார் மற்றும் மினிவேன் ஆகியவை ஒன்றன்பின் ஒன்றாக சென்று கொண்டிருந்தது. அப்போது எதிரே வந்த சரக்கு லாரி ஒன்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி, திடீரென கார் மற்றும் மினி வேன் மீது பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. மோதிய வேகத்தில் சாலையோர பள்ளத்துக்குள் சரக்கு லாரி கவிழ்ந்தது.

இந்த விபத்தில் காரை ஓட்டி வந்த வெங்கல் கிராமத்தைச் சேர்ந்த ராம்குமார் (வயது 26), அவரது தந்தை தீனதயாளன் (46), மற்றும் மினி வேனை ஓட்டி வந்த வேற்காடு கிராமத்தைச் சேர்ந்த டிரைவர் முரளி, கிளனர் விக்னேஷ் ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடினர்.

இதைக்கண்ட அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு பெரியபாளையம் இன்ஸ்பெக்டர் மகேஸ்வரி தலைமையில், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்தனர். படுகாயமடைந்த 4 பேரையும் மீட்டு திருவள்ளூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால், ஆஸ்பத்திரி செல்லும் வழியிலேயே தீனதயாளன் பரிதாபமாக உயிரிழந்தார். மேலும், காயமடைந்த 3 பேரும் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விபத்துக்கு காரணமான தப்பியோடிய லாரி டிரைவரை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் செய்திகள்