மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டம்
திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் கொரோனா நிவாரணம் கேட்டு மாற்றுத்திறனாளிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தா.பேட்டை,
திருச்சி மாவட்டத்தில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கொரோனா தொற்று பரவலை தடுக்கும் வகையில் ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த கொரோனா ஊரடங்கு காலக்கட்டத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வாழ்வாதார நிவாரணமாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கம் சார்பில் திருச்சி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் போராட்டம் நடந்தது.
திருச்சி மேற்கு தாலுகா அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு மாநகர் மாவட்ட செயலாளர் கோபிநாத், சோமரசம்பேட்டை வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு மணிகண்டம் ஒன்றிய செயலாளர் ஆரோக்கியராஜ், மணிகண்டம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு ஒன்றிய தலைவர் குமார், ஜீயபுரம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு அந்தநல்லூர் ஒன்றிய தலைவர் புவனேசுவரி ஆகியோர் தலைமை தாங்கினார்கள்.
போராட்டம்
குழுமணி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் முன் அந்தநல்லூர் ஒன்றிய பொருளாளர் கிருஷ்ணமூர்த்தி தலைமையிலும், தா.பேட்டை அருகே மகாதேவி கிராமத்தில் ஒன்றிய தலைவர் பொன்னுசாமி தலைமையிலும், திருவெறும்பூர் பஸ்நிலையம் முன் திருச்சி புறநகர் மாவட்ட தலைவர் குமார் தலைமையிலும் போராட்டம் நடந்தது. மேலும் துலையாநத்தம், சேருகுடி ஆகிய கிராமங்களிலும் கண்டன போராட்டம் நடைபெற்றது.
இந்த போராட்டங்களில் திருச்சி மாநகர் மாவட்ட தலைவர் ஜெயபால், மாநில துணை செயலாளர் புஷ்பநாதன் உள்ளிட்ட திரளான மாற்றுத்திறனாளிகள் கலந்து கொண்டனர். பலர் மூன்று சக்கர வாகனங்களுடன் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.