கொரோனா தொற்று அதிகரிப்பு: விழுப்புரம், திண்டிவனத்தில் முழு ஊரடங்கு குறித்து அதிகாரிகள் ஆலோசனை
கொரோனா தொற்று அதிகரித்து வரும் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி பகுதிகளில் முழு ஊரடங்கு செய்வது குறித்து அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்டத்தில் நாள்தோறும் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் வரை மாவட்டத்தில் 1,232 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதுவரை 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
தொடர்ந்து, நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் விழுப்புரம் மாவட்டத்தில் முழு ஊரடங்கை அமல்படுத்தி நோய் பரவலை தடுக்க மாவட்டநிர்வாகம் உத்தரவிட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் பலரும் கோரிக்கை வைத்துள்ளனர்.
இந்நிலையில் விழுப்புரம், திண்டிவனத்தில் அமைச்சர் சி.வி.சண்முகம், மாவட்ட கலெக்டர் அண்ணாதுரை ஆகியோர் தலைமையில் கொரோனா வைரஸ் தொற்றை தடுப்பது தொடர்பாக ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் நோய் பரவலை தடுக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறுகையில், நேற்று முன்தினம் வரை விழுப்புரம் மாவட்டத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 607 பேர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் விழுப்புரம் நகராட்சியை சேர்ந்த 57 பேரும், திண்டிவனம் நகராட்சியை சேர்ந்த 36 பேரும் அடங்குவர்.
இந்த 2 நகராட்சி பகுதிகளிலும் தொடர்ந்து நோய் பரவல் அதிகரித்து வருவதால் அப்பகுதிகளில் சென்னைக்கு சென்று வந்தவர்கள் அதிகம் வசிக்கும் பகுதிகளை மட்டும் தனிமைப்படுத்தலாமா? அல்லது நகராட்சிகள் முழுவதையும் முழு ஊரடங்கை கொண்டு வந்து, அங்கிருந்து யாரும் வெளியே வராதபடி செய்யலாமா? என்று அதிகாரிகள் ஆலோசனை மேற்கொண்டு வருவதாகவும், இதுதொடர்பாக பல்வேறு தரப்பினரிடம் இருந்து கருத்துகளும் கேட்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.