போலீஸ்காரர்களுக்கு கொரோனா: வள்ளியூர், மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையம் மூடப்பட்டது
போலீஸ்காரர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதால் வள்ளியூர், மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையம் மூடப்பட்டது. களக்காட்டில் ஜவுளிக்கடைகள் 15-ந் தேதி வரை அடைக்கப்படுகிறது.
வள்ளியூர்,
நெல்லை மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. வள்ளியூர் போலீஸ் நிலையத்தில் பணிபுரிந்து வரும் இரண்டாம் நிலை காவலர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வள்ளியூர் நகர பஞ்சாயத்து சார்பில் போலீஸ் நிலையத்தில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டு மூடப்பட்டது. தொடர்ந்து வள்ளியூர் போலீஸ் நிலையம் மூன்று நாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்காலிகமாக வள்ளியூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள புறக்காவல் நிலையத்தில் போலீஸ் நிலையம் செயல்பட்டு வருகிறது. போலீஸ்காரருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அவருடன் தொடர்புடைய மற்ற போலீஸ்காரர்கள் தனிமைப்படுத்தப்பட்டு பரிசோதனை மேற்கொள்ளப்பட இருக்கிறது. காவலர் குடியிருப்பு பகுதிகளிலும் கிருமி நாசினி மருந்து தொளிக்கப்பட்டது. போலீஸ் நிலையம் அமைந்துள்ள பகுதிகளில் உள்ள குடியிருப்புவாசிகளுக்கு நகர பஞ்சாயத்து நிர்வாகம் சார்பில் கபசுர குடிநீர் வழங்கப்பட்டது.
களக்காடு
களக்காட்டில் ஏற்கனவே தொற்று பாதித்த ஜவஹர் வீதியை சேர்ந்த ஜவுளிக்கடை உரிமையாளரின் மனைவி, மகள், மேலும் அண்ணாசாலையில் ஜவுளிக்கடை நடத்தி வரும் நெடுவிளையை சேர்ந்த வியாபாரி, சிவசண்முகபுரத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர், மலையடிபுதூரை சேர்ந்த வாலிபர், சீனிவாசபுரத்தை சேர்ந்த வாலிபர் ஆகிய 6 பேருக்கு கொரோனா தொற்று நேற்று உறுதி செய்யப்பட்டது. இதில் சீனிவாசகபுரத்தை சேர்ந்தவர் ஒடிசா மாநிலத்தில் இருந்து வந்தவர் ஆவார். அவருக்கு கங்கைகொண்டான் சோதனை சாவடியில் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நேற்றும் மற்றொரு ஜவுளிக்கடை வியாபாரியான நெடுவிளையை சேர்ந்தவருக்கு தொற்று ஏற்பட்டதால் களக்காடு பழைய பஸ் நிலையத்தில் அவர் நடத்தி வந்த ஜவுளிக்கடை மற்றும் அதன் அருகில் உள்ள கடைகளும் மூடப்பட்டது. நகர பஞ்சாயத்து ஊழியர்கள் கிருமி நாசினி தெளிக்கும் பணியில் ஈடுபட்டனர். தொற்று பாதித்தவர்கள் நெல்லை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இதற்கிடையே தொற்று பரவாமல் தடுக்க களக்காட்டில் உள்ள தங்கம், வெள்ளி மற்றும் ஜவுளிக்கடைகளை வரும் 15-ந் தேதி வரை முழுவதுமாக மூட நகர பஞ்சாயத்து நிர்வாக அதிகாரி சுஷ்மா உத்தரவிட்டுள்ளார். மேலும் நேற்று சுகாதார ஆய்வாளர் ஆறுமுகநயினார், சுகாதார மேற்பார்வையாளர்கள் வேலு, சண்முகம் மற்றும் பணியாளர்கள் முக கவசம் இன்றி சுற்றி திரிந்த 10 பேருக்கு ரூ.100 வீதம் அபராதம் விதித்தனர்.
இதேபோல் மகேந்திரகிரி இஸ்ரோ மையத்தில் அமைந்து உள்ள தீயணைப்பு நிலையத்தில் ஒப்பந்த பணியாளர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவருடன் தொடர்பில் இருந்த 12 தீயணைப்பு வீரர்கள் 19-ந் தேதி வரை தனிமைப்படுத்தப்படுவதாக இஸ்ரோ மைய தலைமை நிர்வாக அதிகாரி சுமா தெரிவித்தார்.
நாங்குநேரியில் அ.தி.மு.க.வை சேர்ந்த முன்னாள் எம்.எல்.ஏ.வின் மகன், பேரன் ஆகியோருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. சிறுமளஞ்சியைச் சேர்ந்த பா.ஜனதா கட்சி நிர்வாகிக்கும், அவரது மகளுக்கும், நாங்குநேரி சுற்றுலா மாளிகையில் ஒருவருக்கும், மூலைக்கரைப்பட்டி போலீஸ் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. இவர்கள் அனைவருக்கும் சிகிச்சைகாக பாளையங்கோட்டை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். மேலும் மூலைக்கரைப்பட்டி போலீஸ் நிலையமும் மூடப்பட்டு உள்ளது.
உவரி-திருச்செந்தூர் சாலையில் உள்ள வங்கியில் பணியாற்றும் ஊழியருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. இதனால் அந்த வங்கி மூடப்பட்டது. இதேபோல் அப்புவிளையைச் சேர்ந்த தொழிலாளிக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
வீரவநல்லூர்
வீரவநல்லூரில் அஞ்சல் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து அஞ்சல் அலுவலகம் மூடப்பட்டு சுகாதாரப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் பணிபுரியும் வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து நேற்று சேரன்மாதேவி வட்டார வளர்ச்சி அலுவலக வளாகம் மூடப்பட்டு வளாகத்தில் உள்ள வட்டார வளர்ச்சி அலுவலகம், வேளாண்மை அலுவலகம், தோட்டக்கலைத் துறை அலுவலகம் உள்ளிட்டவை மூடப்பட்டு முழுமையாக கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.