பட்ஜெட் விவகாரத்தில் எந்த கால தாமதமும் செய்யவில்லை நாராயணசாமி குற்றச்சாட்டுக்கு கவர்னர் மாளிகை பதிலடி
பட்ஜெட் விவகாரத்தில் எந்த காலதாமதமும் செய்யவில்லை என்று நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.
புதுச்சேரி,
பட்ஜெட் விவகாரத்தில் எந்த காலதாமதமும் செய்யவில்லை என்று நாராயணசாமியின் குற்றச்சாட்டுக்கு கவர்னர் மாளிகை பதிலடி கொடுத்துள்ளது.
குற்றச்சாட்டு
புதுச்சேரி முதல்-அமைச்சர் நாராயணசாமி நேற்று முன்தினம் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், கடந்த ஏப்ரல் மாதம் பட்ஜெட்டை தாக்கல் செய்ய பிப்ரவரி மாதத்தில் ஆயத்த நடவடிக்கை எடுத்து கோப்புகளை தயாரித்தோம். அதை கவர்னருக்கு அனுப்பிய போது அதில் பல கேள்விகளை கேட்டு கால தாமதப்படுத்தி திருப்பி அனுப்பினார். இதுதான் பட்ஜெட் தாக்கல் செய்வதில் தாமதம் ஏற்பட்டதற்கு காரணம் என்று குற்றஞ்சாட்டி இருந்தார்.
கவர்னர் மாளிகை மறுப்பு
இதற்கு பதில் அளித்து கவர்னர் மாளிகை விடுத்துள்ள ஒரு செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
உள்துறை அமைச்சகத்திற்கு யூனியன் பிரதேச நிர்வாகத்திற்கான பரிந்துரைகளை பரிந்துரைப்பதில் கவர்னர் அலுவலகத்தால் எந்த காலதாமதமும் ஏற்படவில்லை. வரவு, செலவு மதிப்பீட்டை உள்துறை அமைச்சகத்திற்கு பரிந்துரைப்பதற்கான கோப்பு கடந்த மே மாதம் 7-ந் தேதி தான் கவர்னர் அலுவலகத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. நிதி துறையில் இருந்து தேவையான விளக்கங்களை பெற்ற பிறகு கவர்னர் கிரண்பெடி மே மாதம் 13-ந் தேதி ஆண்டு வரவு, செலவு திட்டத்தை பரிந்துரைத்தார்.
அதன்பிறகு உள்துறை அமைச்சகம் சில தெளிவுபடுத்தல்களை கோரியது. இதற்கான கோப்பு ஜூன் 10-ந் தேதி கவர்னர் அலுவலகத்திற்கு அரசாங்கத்தால் சமர்ப்பிக்கப்பட்டது. அதே நாளில் கவர்னர் ஒப்புதல் அளித்து உள்துறை அமைச்சகத்திற்கு கோப்பு அனுப்பப்பட்டது. இந்த ஒப்புதல்கள் குறித்த விளக்கம் கவர்னர் அலுவலகத்தால் வார இறுதியில் வெளியிடப்பட்ட கோப்புகளின் பட்டியலில் உள்ளது.
யூனியன் பிரதேச அரசு சட்டம் 1963-ன் கீழ் வருடாந்திர வரவு, செலவு திட்டம் கவர்னர் பரிந்துரையுடன் முன் ஒப்புதலுக்காக ஜனாதிபதி, உள்துறை அமைச்சகத்திற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும். உள்துறை அமைச்சகத்தின் ஒப்புதல் பெற்ற பிறகு சட்டமன்றத்தில் இந்த வரவு -செலவு திட்டம் நிறைவேற்றப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.