கிருஷ்ணாபுரம் சித்த மருத்துவருக்கு கொரோனா அரியலூர் மாவட்டத்தில் 2 பேர் பாதிப்பு
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்த சித்த மருத்துவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார்.;
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மொத்தம் 167 பேரில், 156 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை தாலுகா கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவரும், அதே பகுதியில் சித்த மருத்துவமனை நடத்தி வருபவருமான 54 வயது ஆண் சித்த மருத்துவர் ஒருவர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளார். அவர் தற்போது திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மேலும் சித்த மருத்துவரின் மனைவி, மகள் உள்பட 3 பேர் மற்றும் சித்த மருத்துவரிடம் மருத்துவம் பார்த்தவர்களுக்கும், அவருடன் தொடர்பில் இருந்தவர்களுக்கும் கொரோனாவுக்கான மருத்துவ பரிசோதனை எடுக்கப்படவுள்ளதாக பெரம்பலூர் மாவட்ட சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர். மேலும் பெரம்பலூர் மாவட்டத்தில் 237 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை முடிவுக்காக அனுப்பப்பட்டுள்ளது. மேலும் வெளிநாடு, வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து பெரம்பலூர் மாவட்டத்திற்கு வந்த 102 பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் மொத்தம் பாதிக்கப்பட்ட 466 பேரில், 450 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் சென்னையில் இருந்து அரியலூருக்கு திரும்பி வந்த அணைகுடத்தை சேர்ந்த 46 வயதுடைய ஆண் ஒருவரும், சென்னையில் இருந்து வந்தவருடன் தொடர்பில் இருந்த சென்னிவனத்தை சேர்ந்த 57 வயதுடைய ஆண் ஒருவரும் என 2 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது மருத்துவ பரிசோதனை முடிவில் உறுதி செய்யப்பட்டது. அவர்கள் 2 பேரும் அரியலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் அரியலூர் மாவட்டத்தில் 235 பேரின் சளி மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.