மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால் செல்போன் கோபுரத்தில் ஏறி தொழிலாளி தற்கொலை மிரட்டல்
மோட்டார் சைக்கிளை போலீசார் பறிமுதல் செய்ததால், குடிபோதையில் தொழிலாளி ஒருவர் செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்தது பரபரப்பை ஏற்படுத்தியது.
கும்மிடிப்பூண்டி,
திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியை அடுத்த நரசிங்கபுரம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜா (வயது 45). வெல்டிங் தொழிலாளி. இவர் ஊரடங்கை மீறி சாலையில் சுற்றி திரிந்ததால் நேற்று காலை சுண்ணாம்புகுளம் அருகே அவரது மோட்டார் சைக்கிளை ஆரம்பாக்கம் போலீசார் பறிமுதல் செய்து போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.
இந்த நிலையில், நேற்று பிற்பகல் எளாவூர் பஜாருக்கு வந்த ராஜா, குடிபோதையில் இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது அவர் அங்கு சாலையோரம் உள்ள செல்போன் கோபுரத்தின் மீது ஏறி அதன் உச்சிக்கு சென்றார்.
அதன் பின்னர் அவர், தனது மோட்டார் சைக்கிளை போலீசார் திருப்பி கொடுக்காவிட்டால் மேலிருந்து கீழே குதித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக மிரட்டல் விடுத்தார்.
இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக ஆரம்பாக்கம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த ஆரம்பாக்கம் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் உள்ளிட்ட போலீசார், செல்போன் கோபுரம் மீது ஏறி தற்கொலை மிரட்டல் விடுத்த நபரிடம் மோட்டார் சைக்கிளை ஒப்படைப்பதாக சமரச பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது எனது மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து காண்பித்தால் தான் மேலிருந்து கீழே இறங்குவேன் என ராஜா தெரிவித்தார். ஆரம்பாக்கம் போலீஸ் நிலையத்தில் இருந்து ராஜாவின் மோட்டார் சைக்கிளை சம்பவ இடத்திற்கு போலீசார் கொண்டு வந்தனர். அதன்பிறகு தற்கொலை மிரட்டலை கைவிட்ட ராஜா, செல்போன் கோபுரத்தில் இருந்து கீழே இறங்கி வந்ததும் அவரிடம் போலீசார் மோட்டார் சைக்கிளை ஒப்படைத்தனர். இதனால் அந்த பகுதியில் 1 மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.