கிண்டியில் அம்மா உணவக 4 பெண் ஊழியர்களுக்கு கொரோனா
கிண்டியில் உள்ள அம்மா உணவகத்தில் பணிபுரிந்த 4 பெண் ஊழியர்களுக்கு கொரோனா உறுதியானதால், அம்மா உணவகம் மூடப்பட்டது.
ஆலந்தூர்,
சென்னை மாநகராட்சி பகுதியில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகமாகி வருவதால் தமிழக அரசு முழு ஊரடங்கை அமல்படுத்தி உள்ளது. யாருக்கும் உணவு கிடைக்காமல் இருக்கக்கூடாது என்பதற்காக அம்மா உணவகங்கள் மட்டும் திறக்கப்பட்டு, 3 வேளையும் இலவசமாக உணவுகளை வழங்க அரசு உத்தரவிட்டு இருந்தது.
கிண்டி ஈக்காட்டுத்தாங்கல் நாகிரெட்டி தெருவில் உள்ள அம்மா உணவகத்தில் நாள்தோறும் 300-க்கும் மேற்பட்டோருக்கு இலவசமாக 3 வேளையும் உணவு வழங்கப்பட்டு வந்தது.
இந்தநிலையில் இங்கு பணியாற்றும் 4 பெண் ஊழியர்களுக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டது. அவர்கள் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். இதையடுத்து அம்மா உணவகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. அடையாறு மண்டல செயற்பொறியாளர் முரளி உத்தரவின்பேரில் நாகிரெட்டி தெருவில் உள்ள மக்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளதா? என்பதை கண்டுபிடிக்க சிறப்பு மருத்துவ முகாம் நடத்தப்பட்டது.
ஆலந்தூர் மண்டலத்தில் நேற்று ஒரே நாளில் 136 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. அடையாறு மண்டலத்தில் 130 பேருக்கும், பெருங்குடி மண்டலத்தில் 50 பேருக்கும், சோழிங்கநல்லூர் மண்டலத்தில் 103 பேருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.
கொரோனா வைரஸ் ஊரடங்கால் பல்வேறு நாடுகளில் சிக்கி தவித்த 23 ஆயிரத்து 492 பேர் சிறப்பு விமானத்தில் சென்னை அழைத்து வரப்பட்டு மருத்துவ பரிசோதனைக்கு பிறகு முகாம்களில் தனிமைப்படுத்தப்பட்டனர். இவர்களில் 413 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
இந்தநிலையில் முகாமில் தங்கி உள்ள குவைத்தில் இருந்து வந்த 9 பேருக்கும், கத்தாரில் இருந்து வந்த 7 பேருக்கும், பக்ரைனில் இருந்து வந்த 3 பேருக்கும், இங்கிலாந்தில் இருந்து வந்த ஒருவருக்கும் என மேலும் 20 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது.
சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு முனையத்துக்கு பல்வேறு நகரங்களில் இருந்து வந்த 65 ஆயிரத்து 654 பேர் தங்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டனர். அதில் மேலும் 6 பேருக்கு தொற்று ஏற்பட்டதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 146 ஆக உயர்ந்தது.