பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலி 4 பேர் படுகாயம்
பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
பாவூர்சத்திரம்,
பாவூர்சத்திரம் அருகே ஆட்டோ கவிழ்ந்து டிரைவர் பலியானார். 4 பேர் படுகாயம் அடைந்தனர்.
டிரைவர் பலி
தென்காசி மாவட்டம் கடையம் அருகே உள்ள வெய்க்காலிபட்டி கீழ தெருவைச் சேர்ந்தவர் பால்பாண்டி. இவரது மகன் மணிகண்டன் (வயது 30). இவர் சொந்தமாக பயணிகள் ஆட்டோ வைத்துள்ளார். இவர் நேற்று முன்தினம் வெய்க்காலிபட்டியில் இருந்து ஆட்களை ஏற்றிக் கொண்டு பாவூர்சத்திரம் அருகே பூவனூருக்கு சென்றுக் கொண்டு இருந்தார். பின்னர் அங்கிருந்து அவர்களை ஏற்றிக்கொண்டு வெய்க்காலிப்பட்டிக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தார்.
கடையம்- தென்காசி சாலையில் வந்து கொண்டிருந்த போது திரவியநகர் ஊர் அருகே சாலையில் நாய் ஒன்று குறுக்கே வந்தது. அதன் மீது மோதாமல் இருக்க மணிகண்டன் பிரேக் போட்டுள்ளார். இதில் ஆட்டோ நிலைதடுமாறி சாலையோரத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் மணிகண்டன் தலையில் அடிபட்டு பலத்த காயம் அடைந்தார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
4 பேர் படுகாயம்
மேலும் இந்த விபத்தில் ஆட்டோவில் வந்த வெய்க்காலிபட்டியைச் சேர்ந்த அன்புபொன்னுத்தாய் (45), ஜெயலட்சுமி (40), அய்யங்கனி (50), மரியமதுலேகா (52) ஆகிய 4 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்கள் தென்காசி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இந்த விபத்து குறித்து பாவூர்சத்திரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
விபத்தில் பலியான மணிகண்டன் உடல் தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பலியான மணிகண்டனுக்கு சுதா (28) என்ற மனைவியும், ராம் (5), ராம் பிரதாப் (4) ஆகிய மகன்களும் உள்ளனர்.
மற்றொரு விபத்து
கீழப்பாவூர் முத்துராமலிங்கம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமநாதன் மகன் சைலபதி (வயது 31). கம்ப்யூட்டர் என்ஜினீயர். இவர் தனது நண்பரான பாவூர்சத்திரம் கே.டி.சி. நகரை சேர்ந்த முத்துகுட்டி மகன் லிங்கேஸ்ராம் என்பவருடன் ஊத்துமலையில் உள்ள நண்பர் வீட்டு நிகழ்ச்சிக்காக சென்று விட்டு நள்ளிரவில் காரில் ஊருக்கு திரும்பி வந்து கொண்டு இருந்தனர். காரை லிங்கேஸ்ராம் ஓட்டினார். முத்துகிருஷ்ணபேரி அருகே வந்த போது எதிர்பாராதவிதமாக இடது புறம் இருந்த ஓட்டல் மீது கார் மோதி நின்றது. இந்த விபத்தில் சைலபதி சம்பவ இடத்திலேயே பலியானார். லிங்கேஸ்ராம் படுகாயம் அடைந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த வீரகேரளம்புதூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். படுகாயம் அடைந்த லிங்கேஸ்ராமை மீட்டு சிகிச்சைக்காக தென்காசி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். மேலும் பலியான சைலபதி உடல் பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து வீரகேரளம்புதூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.