தங்கையின் உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய சுடுகாட்டில் அமர்ந்து போராடும் வாலிபர்

தங்கையின் சாவில் மர்மம் உள்ளது, ஆகவே அவரது உடலை மீண்டும் பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி சுடுகாட்டில் அவரது சகோதரர் காத்திருந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

Update: 2020-07-05 07:39 GMT
மதுராந்தகம்,

செங்கல்பட்டு மாவட்டம் செய்யூரை அடுத்த நைனார் குப்பத்தை சேர்ந்தவர் கிருஷ்ணன். உடல்நிலை பாதிக்கப்பட்டு வீட்டிலேயே இருந்து வருகிறார். இவரது மனைவி சந்திரா. கேளம்பாக்கத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுடைய இளைய மகளான சசிகலா (வயது 25) கூடுவாஞ்சேரியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்தார்.

கொரோனா தொற்று காரணமாக பணி இல்லாமல் வீட்டிலேயே இருந்து வந்தார். கடந்த மாதம் 24-ந்தேதி அவரது தாயார் பணிக்கு சென்றபோது வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சசிகலா தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக செய்யூர் போலீஸ் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து மதுராந்தகம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்து அவரது உடல் அடக்கம் செய்யப்பட்டது. அடக்கம் செய்த மறுநாள், தனது தங்கையின் சாவில் மர்மம் உள்ளதாக அவரது சகோதரர் அருண்பாபு (28) செய்யூர் போலீஸ் நிலையத்தில் தனது பெரியப்பா மகன்களான புருஷோத்தமன், தேவேந்திரன் ஆகியோர் மீது புகார் செய்தார்.

அந்த புகாரில், “சசிகலா குளிக்கும் போது அதை புருஷோத்தமன் செல்போனில் வீடியோ எடுத்து 5 ஆண்டுகளாக அவரை மிரட்டி ப ாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டுள்ளார்.

சசிகலாவுக்கு திருமண ஏற்பாடுகள் நடக்கவே, தங்களுக்கு தெரியாமல் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டால் வீடியோக்களை வலைதளங்களில் பதிவிட்டு விடுவோம் என மிரட்டி உள்ளனர்” என்று குறிப்பிட்டிருந்தார்.

புருஷோத்தமன் மற்றும் தேவேந்திரன் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும், மீண்டும் தங்கையின் உடலை மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று கூறி சசிகலா புதைக்கப்பட்ட இடத்தில் சுடுகாட்டில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

இது குறித்து செங்கல்பட்டு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணனிடமும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்