கர்நாடகத்தில் ஒரே நாளில் கொரோனாவுக்கு 42 பேர் பலி பாதிப்பும், பலியும் புதிய உச்சத்தை தொட்டது
கர்நாடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 42 பேர் பலியானார்கள்
பெங்களூரு,
கர்நாடத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 42 பேர் பலியானார்கள். அதோடு 1,839 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் கர்நாடகத்தில் பாதிப்பும், பலியும் நேற்று புதிய உச்சத்தை தொட்டது.
1,839 பேருக்கு வைரஸ்
கர்நாடகத்தில் கடந்த ஒரு வாரமாக கொரோனா வேகமாக பரவி வருகிறது. ஒவ்வொரு நாளும் முந்தைய தினத்தின் உச்சத்தை தாண்டி வைரஸ் தொற்று எண்ணிக்கை பதிவாகி வருகிறது. நேற்று முன்தினம் 1,694 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக ஒரே நாளில் 1,839 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. மேலும் உயிரிழப்பிலும் புதிய உச்சத்தை தொட்டு, ஒரே நாளில் 42 பேர் மரணம் அடைந்துள்ளனர்.
கர்நாடகத்தில் கொரோனா மிக வேகமாக பரவ தொடங்கி இருப்பதால், கர்நாடக அரசு அதிர்ச்சி அடைந்துள்ளது. வைரஸ் தொற்றை தடுக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறபோதும், கொரோனா பரவுவதை அரசால் தடுக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
கொரோனா பரவும் வேகம்
அடுத்து வரும் நாட்களில் பாதிப்பு மேலும் அதிகரிக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த பரவலை பார்க்கும்போது, மீண்டும் ஒரு முறை ஊரடங்கு அமல்படுத்தினாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்று மருத்துவ நிபுணர்கள் கூறியுள்ளனர். கொரோனா பரவும் வேகத்தை கட்டுப்படுத்த வேண்டிய கட்டாயத்தில் அரசு உள்ளது. அதற்கு ஊரடங்கு தான் வழி என்று நிபுணர்கள் சிலர் கூறுகிறார்கள்.
நேற்றைய பாதிப்பு குறித்து கர்நாடக அரசின் சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 19 ஆயிரத்து 413 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் நேற்று புதிதாக 1,839 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 21 ஆயிரத்து 252 ஆக அதிகரித்துள்ளது. மாநிலத்தில் இதுவரை 9 ஆயிரத்து 244 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதில் நேற்று மட்டும் 439 பேர் அடங்குவர்.
ஒரே நாளில் 42 பேர் பலி
புதிதாக கொரோனா பாதித்தோரில், பெங்களூரு நகரில் 1,172 பேர், தட்சிணகன்னடாவில் 75 பேர், பல்லாரியில் 73 பேர், பீதரில் 51 பேர், தார்வாரில் 45 பேர், ராய்ச்சூரில் 41 பேர், மைசூருவில் 38 பேர், கலபுரகி, விஜயாப்புராவில் தலா 37 பேர், மண்டியா, உத்தரகன்னடாவில் தலா 35 பேர், சிவமொக்காவில் 31 பேர், ஹாவேரியில் 28 பேர், பெலகாவியில் 27 பேர், ஹாசனில் 25 பேர், உடுப்பியில் 18 பேர், சிக்பள்ளாப்பூர், துமகூருவில் தலா 12 பேர், பெங்களூரு புறநகர், கோலாரில் தலா 11 பேர், தாவணகெரேயில் 7 பேர், சாம்ராஜ்நகரில் 5 பேர், கதக்கில் 4 பேர், கொப்பல், சிக்கமகளூருவில் தலா 3 பேர், ராமநகரில் 2 பேர், யாதகிரியில் ஒருவர் உள்ளனர். பாகல்கோட்டை, சித்ரதுர்கா, குடகு ஆகிய 3 மாவட்டங்களில் நேற்று பாதிப்பு ஏற்படவில்லை.
கர்நாடகத்தில் நேற்று ஒரே நாளில் கொரோனாவுக்கு 42 பேர் பலியாகியுள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 24 பேர் அடங்குவர். தார்வாரில் 3 பேர், தட்சிண கன்னடாவில் 4 பேர், ஹாசனில் ஒருவர், கலபுரகியில் 3 பேர், பீதரில் 6 பேர், பெங்களூரு புறநகரில் ஒருவர் உயிரிழந்து உள்ளனர். இதன் மூலம் கர்நாடகத்தில் கொரோனாவுக்கு பலியானோரின் எண்ணிக்கை 339 ஆக அதிகரித்துள்ளது. இதில் பெங்களூருவில் மட்டும் 130 பேர் அடங்குவர்.
மருத்துவ கணகாணிப்பு
கர்நாடகத்தில் தற்போது மருத்துவமனைகளில் 11 ஆயிரத்து 966 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். அதில் 226 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பெங்களூருவில் மட்டும் 124 பேர் இருக்கிறார்கள். கர்நாடகத்தில் இதுவரை 6 லட்சத்து 89 ஆயிரத்து 526 மாதிரிகள் பரிசோதனை நடத்தப்பட்டுள்ளன. இதில் நேற்று மட்டும் 17 ஆயிரத்து 592 மாதிரிகள் அடங்கும். 56 ஆயிரத்து 341 பேர் மருத்துவ கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பெங்களூருவில் கொரோனா பாதித்தோரின் எண்ணிக்கை 8,345 ஆக அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.