கொரோனா அறிகுறி இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் மாநகராட்சி அறிவுரை
கொரோனா அறிகுறி இருந்தால் வீட்டில் தனிமைப்படுத்தி கொள்ளுங்கள் என்று மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
மதுரை,
மதுரை நகரில் கொரோனா பரவுதலை கட்டுப்படுத்த மாநகராட்சி பல்வேறு நடவடிக்கை எடுத்தது. ஆனால் பொதுமக்களின் ஒத்துழைப்பு இல்லாமல் போனதால் தற்போது நகரில் கொரோனாவின் கோரத்தாண்டவம் உச்சகட்டத்தை எட்டி உள்ளது. நேற்றைய நிலவரப்படி மதுரை மாவட்டத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 405 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். அதில் மாநகராட்சி பகுதியில் மட்டும் 1,627 பேர் இருக்கின்றனர். மண்டலம் 1-ல் 423 பேரும், மண்டலம் 2-ல் 486 பேரும், மண்டலம் 3-ல் 349 பேரும், மண்டலம் 4-ல் 369 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
மண்டலம் 1-ல் அதிகபட்சமாக 19-வது வார்டு பொன்மேனியில் 46 பேர், 13-வது வார்டு அழகரடியில் 35 பேர், 17-வது வார்டு எல்லீஸ்நகரில் 34 பேர், 6-வது வார்டு மீனாம்பாள்புரத்தில் 30 பேர் சிகிச்சை பெறுகின்றனர். அந்த மண்டலத்தில் குறைந்தபட்சமாக 20-வது வார்டு அரசரடி மற்றும் 10-வது வார்டு ஆரப்பாளையத்தில் தலா 3 பேரும், 2-வது வார்டு கூடல்நகரில் 5 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
ரிசர்வ்லைன்
மண்டலம் 2-ல் அதிகபட்சமாக 35-வது வார்டு மதிச்சியத்தில் 41 பேரும், 47-வது வார்டு ரிசர்வ்லைனில் 34 பேரும், 28-வது வார்டு உத்தங்குடி மற்றும் 44-வது வார்டு கே.கே.நகரில் தலா 33 பேரும், 25-வது வார்டு கண்ணனேந்தலில் 32 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். குறைந்தபட்சமாக 38-வது வார்டு பந்தல்குடியில் 3 பேரும், 34-வது வார்டு சாந்தமங்கலத்தில் 4 பேரும் சிகிச்சை பெறுகின்றனர்.
மண்டலம் 3-ல் அதிகபட்சமாக 56-வது வார்டு சின்ன அனுப்பானடியில் 36 பேரும், 50-வது வார்டு சுவாமி சன்னடி மற்றும் 53-வது வார்டு பங்கஜம் காலனியில் தலா 25 பேரும், 73-வது வார்டு லட்சுமிபுரத்தில் 23 பேரும், 67-வது வார்டு மஞ்சணக்கார பகுதி மற்றும் 61-வது வார்டு வில்லாபுரம் புதுநகரில் தலா 22 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். குறைந்தபட்சமாக 69-வது வார்டில் புதிய மரியன்னை பகுதியில் 2 பேரும், 62-வது வார்டு கதிர்வேல்நகரில் 3 பேரும், 70-வது வார்டு காமராஜர்புரத்தில் 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ஜடாமுனி கோவில்
மண்டலம் 4-ல் அதிகபட்சமாக 85-வது வார்டு ஜடாமுனி கோவில் பகுதியில் 47 பேரும், 77-வது வார்டு சுந்தர்ராஜபுரத்தில் 35 பேரும், 81-வது வார்டு தமிழ்சங்கம் பகுதியில் 32 பேரும் சிகிச்சை பெறுகின்றனர். குறைந்தபட்சமாக 90-வது வார்டு வீரகாளியம்மன் கோவில் பகுதியில் 2 பேரும், 79-வது வார்டு பெருமாள் தெப்பக்குளம் மற்றும் 91-வது வார்டு பகுதியில் தலா 4 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதற்கிடையில் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பதால் அரசு ஆஸ்பத்திரி மற்றும் தனிமை மையங்களில் படுக்கை வசதிகள் தட்டுப்பாடு உள்ளது. எனவே நோயாளிகள் வீட்டிலேயே தனிமைப்படுத்தும் திட்டத்தை மாநகராட்சி தொடங்கி உள்ளது. தனிமைப்படுத்துபவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை மாநகராட்சி தொலைப்பேசி மூலம் தொடர்பு கொண்டு வழங்குகிறது. இந்த நிலையில் கொரோனா அறிகுறி இருப்பவர்கள் ஆரம்பகட்டத்திலேயே தங்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும் என்று மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆலோசனை பெறலாம்
இதுகுறித்து மாநகராட்சி கமிஷனர் விசாகன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள பொதுமக்கள் யாருக்கேனும் காய்ச்சல், அதீத உடல்வலி, சளி, இருமல் ஏதேனும் அறிகுறி இருந்தால் உடனடியாக தங்களை தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். அத்துடன் தங்கள் குடும்பத்தில் உள்ளவர்களை வீட்டை விட்டு வெளியில் செல்வதை தவிர்க்க வேண்டும். அறிகுறி இருப்பவர்கள் மதுரை மாநகராட்சியின் அழைப்பு மையத்தை 8428425000 என்ற எண்ணில் தொடர்பு கொண்டு மருத்துவ ஆலோசனை பெறலாம். மேலும் மாநகராட்சியின் நகர்ப்புற சுகாதார நிலையங்கள் மற்றும் நடமாடும் வாகனங்கள் மூலம் தினந்தோறும் 95 இடங்களில் நடைபெறும் காய்ச்சல் முகாமிற்கு சென்று பயனடையலாம்.