திருப்பூரில் வீட்டில் பதுக்கி விற்ற 95 கிலோ கலப்பட டீத்தூள் பறிமுதல் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் நடவடிக்கை
திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 95 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
திருப்பூர்,
திருப்பூரில் வீட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்த 95 கிலோ கலப்பட டீத்தூளை உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து நடவடிக்கை மேற்கொண்டனர்.
கலப்பட டீத்தூள் பறிமுதல்
திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை தலைமையில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் மணி, கேசவராஜ், சதீஷ், லியோ, பாலமுருகன் ஆகியோர் கொண்ட குழுவினர் திருப்பூர் சந்திராபுரம் பகுதிகளில் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள்.
அப்போது சாயமேற்றப்பட்ட கலப்பட டீத்தூள் இருப்பு வைக்கப்பட்ட ஒரு வீட்டில் அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினார்கள். அந்த வீட்டில் 95 கிலோ கலப்பட டீத்தூள் இருப்பு வைக்கப்பட்டது தெரியவந்தது. அதை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். ரகுபதி (வயது 54) என்பவர் அந்த வீட்டை வாடகைக்கு எடுத்து கலப்பட டீத்தூளை பதுக்கி வைத்து பேக்கரி, டீக்கடைகளுக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அந்த வீட்டை அதிகாரிகள் பூட்டினார்கள்.
இருப்பு வைத்து விற்பனை
ஆய்வு குறித்து உணவு பாதுகாப்பு நியமன அதிகாரி விஜயலலிதாம்பிகை கூறும்போது, திருப்பூரின் புறநகர் பகுதியில் உள்ள டீக்கடைகளில் கலப்பட டீத்தூள் விற்பனை செய்யப்படுவது கண்டறியப்பட்டது. அதைத்தொடர்ந்து ரகசியமாக கண்காணித்து இந்த வீட்டில் இருந்து கலப்பட டீத்தூள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. வெளியூரில் இருந்து கொஞ்சம், கொஞ்சமாக கலப்பட டீத்தூளை வாங்கி இருப்பு வைத்து அதன்பிறகு டீக்கடைகளுக்கு விற்பனை செய்யப்படுகிறது. பறிமுதல் செய்த டீத்தூள் மாதிரி எடுக்கப்பட்டு பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. சோதனை முடிவின்படி ரகுபதி மீது நீதிமன்றத்தில் குற்றவியல் வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
கலப்பட டீத்தூளில் சாயம் சேர்க்கப்பட்டுள்ளதால் சிறிய அளவு டீத்தூளை வைத்து அதிகப்படியான டீ தயாரிக்க முடியும். இதுபோன்ற கலப்பட டீத்தூளை பயன்படுத்தி டீ குடிப்பதால் வயிற்று உபாதை, புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு உண்டு. இதுபோன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் நடைபெறும் என்றார்.