பவானியில் பயங்கரம்: சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கத்தியால் குத்தி படுகொலை போலீசார் விசாரணை
பவானியில் சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
பவானி,
பவானியில் சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கத்தியால் குத்தி படுகொலை செய்யப்பட்டார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுபற்றி போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-
சூதாட்ட விடுதி
ஈரோடு மாவட்டம் பவானி சீனிவாசபுரம் 2-வது வீதியை சேர்ந்தவர் மெட்ராஸ் மணி என்கிற மணிகண்டன் (வயது 50). இவர் பவானியில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சூதாட்ட விடுதி நடத்தி வந்தார். இந்த நிலையில் அந்த விடுதியை மூடிவிட்டார். அதன்பின்னர் பல்வேறு பகுதிகளுக்கு சென்று பணம் வைத்து சூதாடுவதே தொழிலாக செய்து வந்ததாக கூறப்படுகிறது.
வழக்கம்போல் நேற்று முன்தினம் மதியம் வீட்டில் இருந்து சூதாட வெளியே சென்றுள்ளார். அதன்பின்னர் இரவு வெகுநேரமாகியும் அவர் வீடு திரும்பவில்லை. இதனால் உறவினர்கள் அவரை பல இடங்களில் தேடிப்பார்த்தனர். இந்தநிலையில் மணிகண்டன் இரவு 10.30 மணி அளவில் சீனிவாசபுரம் தலைமை தபால் நிலையம் பின்புறம் உடல் முழுவதும் பலத்த ரத்த காயங்களுடன் உயிருக்கு போராடி கொண்டிருந்தார். அவர் முகத்தில் மிளகாய் பொடியும் தூவப்பட்டு இருந்தது.
கத்தியால் குத்தி கொலை
இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் உடனே இதுகுறித்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் விரைந்து வந்த 108 ஆம்புலன்ஸ் மருத்துவ குழுவினர் மணிகண்டனை பரிசோதனை செய்தனர். அப்போது அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். பின்னர் இதுபற்றி பவானி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
அதைத்தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று உடலை பார்வையிட்டு விசாரணையை தொடங்கினார்கள்.
மணிகண்டன் மொபட்டில் சென்றபோது யாரோ மர்மநபர்கள் தடுத்து நிறுத்தியுள்ளனர். அதன்பின்னர் அவரது முகத்தில் மிளகாய் பொடி தூவி கத்தியால் அவரது உடலில் கை, கழுத்து, முதுகு மார்பு என சரமாரியாக குத்தியுள்ளனர். இதில் படுகாயம் அடைந்த அவர் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்துள்ளார். பிறகு மர்மநபர்கள் அங்கிருந்து தப்பித்து சென்றது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
போலீசார் விசாரணை
மேலும் சம்பவ இடத்துக்கு மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அது கொலை நடந்த இடத்தில் இருந்து காலிங்கராயன் அணைக்கட்டு பின்புறம் உள்ள உத்தண்டராயன்கோவில் வரை ஒடி சென்று நின்று கொண்டது. ஆனால் யாரையும் கவ்விப்பிடிக்கவில்லை. இதைத்தொடர்ந்து உடலை கைப்பற்றிய போலீசார் பிரேத பரிசோதனைக்காக பவானி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
கொலையான மணிகண்டன் மீது பவானியில் கடந்த 2008-ம் ஆண்டு நடந்த ஒரு கொலை வழக்கும், ஈரோடு மாவட்டத்தில் உள்ள பல்வேறு போலீஸ் நிலையங்களில் சூதாட்ட வழக்கும் நிலுவையில் உள்ளது. எனவே சூதாட்டத்தில் ஏற்பட்ட முன்விரோதத்தில் அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து, பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி மர்மநபர்களை தேடி வருகிறார்கள்.
சூதாட்ட விடுதி நடத்தி வந்தவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.