மத்திய அரசை கண்டித்து தேனி உள்பட 5 இடங்களில் சட்ட நகல் எரிப்பு போராட்டம் விவசாய சங்கத்தினர் 62 பேர் கைது
தேனி உள்பட 5 இடங்களில் மத்திய அரசை கண்டித்து சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட விவசாய சங்கத்தினர் 62 பேரை போலீசார் கைது செய்தனர்.
தேனி,
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண்மை உற்பத்தி பொருட்கள் வணிக ஊக்குவிப்பு அவசர சட்டம், விவசாயிகளுக்கு விலை உத்தரவாதம் மற்றும் சேவைகள் மீதான அவசர சட்டம் ஆகியவற்றுக்கு அகில இந்திய விவசாயிகள் சங்கம் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த அவசர சட்டங்களால் விவசாயிகள் பாதிக்கப்படுவார்கள் என்றும், இந்த சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தியும் தேனி மாவட்டத்தில் அகில இந்திய விவசாயிகள் சங்கம் சார்பில் 5 இடங்களில் சட்ட நகல்கள் எரிப்பு போராட்டம் நேற்று நடந்தது. தேனியில் நேரு சிலை சிக்னல் பகுதியில் போராட்டம் நடந்தது. இதற்காக அவர்கள் சுப்பன் தெருவில் இருந்து கோஷங்கள் எழுப்பியபடி ஊர்வலமாக வந்தனர். போராட்டத்துக்கு மாவட்ட செயலாளர் கண்ணன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் வெங்கடேசன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர். ஆர்ப்பாட்டத்தின் போது சட்ட நகல்களை தீ வைத்து எரித்தனர். அதை போலீசார் தடுத்து நிறுத்தி சட்ட நகல்கள் மீது தண்ணீர் ஊற்றினர். இதனால், போலீசாருடன் விவசாயிகள் சங்கத்தினர் வாக்குவாதம் செய்து, மீண்டும் சட்ட நகல்களை எரித்தனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
62 பேர் கைது
அதுபோல், கூடலூரில் மாவட்ட தலைவர் ஜெயராஜ் தலைமையில் போராட்டம் நடந்தது. போராட்டத்தில் ஈடுபட்ட 8 பேர் கைது செய்யப்பட்டனர். கோம்பையில் மாவட்ட பொருளாளர் சஞ்சீவ்குமார் தலைமையில் சட்டநகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுபட்ட 13 பேரும், போடியில் மாநிலக்குழு உறுப்பினர் ராஜப்பன் தலைமையில் போராட்டம் நடத்திய 16 பேரும் கைது செய்யப்பட்டனர். பெரியகுளத்தில் போராட்டம் நடத்திய தாலுகா செயலாளர் முருகன் உள்பட 15 பேர் போராட்டத்தில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டனர்.
மாவட்டத்தில் 5 இடங்களிலும் மொத்தம் 62 பேர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அந்தந்த பகுதிகளில் உள்ள திருமண மண்டபங்களில் அடைக்கப்பட்டனர். பிற்பகலில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.