கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை மந்திரி சுரேஷ்குமார் அறிவிப்பு

கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.;

Update: 2020-06-10 22:32 GMT
பெங்களூரு,

கர்நாடகத்தில் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள குழந்தைகளுக்கு ஆன்லைன் வகுப்பு நடத்த தடை விதிக்கப்படுவதாக பள்ளி கல்வித்துறை மந்திரி சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

அனுமதிக்கக்கூடாது

கர்நாடக கல்வித்துறை அதிகாரிகளுடன் மந்திரி சுரேஷ்குமார் பெங்களூருவில் நேற்று ஆலோசனை நடத்தினார். இதில் கல்வித்துறை நிபுணர்கள், மனநல மருத்துவ நிபுணர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு கல்வி கற்பித்தலை அனுமதிப்பது குறித்து இந்த கூட்டத்தில் விரிவாக ஆலோசனை நடத்தப்பட்டது.

இதில் பேசிய கல்வித்துறை அதிகாரிகள், தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம கல்வி கற்கும் திறன் இருப்பது இல்லை, அதனால் தொடக்க பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் கற்பித்தலை அனுமதிக்கக்கூடாது என்று ஆலோசனை தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மந்திரி சுரேஷ்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மாற்று வழி அல்ல

பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகள் எடுப்பது குறித்து பல்வேறு புகார்கள் அரசுக்கு வந்துள்ளன. குழந்தைகளின் திறனை அறியாமல், ஆன்லைனில் வகுப்புகள் எடுக்கப்படுவதாக பெற்றோர் தெரிவித்தனர். கடந்த 2-ந் தேதி இதுகுறித்து விவாதிக்க கல்வித்துறை அதிகாரிகளின் கூட்டத்தை நடத்தினேன். அந்த கூட்டத்தில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் இன்று (அதாவது நேற்று) எனது தலைமையில் அதிகாரிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் ஆன்லைன் மூலம் குழந்தைகளுக்கு வகுப்புகள் எடுப்பது குறித்து விரிவாக ஆலோசிக்கப்பட்டது. கற்றலுக்கு ஆன்லைன் முறை மாற்று வழி அல்ல என்று தங்களின் கருத்துகளை கூட்டத்தில் பங்கேற்ற நிபுணர்கள் தெரிவித்தனர்.

ஆன்லைன் வகுப்புக்கு தடை

பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் குழந்தைகளை கற்றலில் ஈடுபடுத்துவது எப்படி என்பது குறித்தும் ஆலோசிக்கப்பட்டது. பாடங்களை நடத்தி முடிக்க வேண்டும் என்பதற்காக கற்பிக்கக்கூடாது. அறிவாற்றலை பெருக்கும் வகையில் கற்பித்தல் இருக்க வேண்டும் என்றும் நிபுணர்கள் தெரிவித்தனர்.

இந்த கூட்டத்தில் 2 முக்கிய முடிவுகளை எடுத்துள்ளோம். அதாவது ஒன்று, மழலையர் பள்ளி குழந்தைகளுக்கு ஆன்லைன் மூலமான கல்வி கற்பித்தலை ரத்து செய்வது, மற்றொன்று 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் மேற்கொள்ளப்பட்டு வரும் ஆன்லைன் வகுப்புகளுக்கு தடை விதிப்பது என்று முடிவு எடுத்துள்ளோம்.

கட்டணத்தை உயர்த்தக்கூடாது

மேலும் தனியார் பள்ளிகள் ஆன்லைன் கல்வி என்ற பெயரில் கட்டணத்தை வசூலிக்கக்கூடாது. மேலும் எந்த பள்ளியும் நடப்பு ஆண்டிற்கு கட்டணத்தை உயர்த்தக்கூடாது. மனிதநேய அடிப்படையில் கல்வி கட்டணத்தில் 50 சதவீதத்தை வசூலிக்கலாம். ஆனால் எக்காரணம் கொண்டும் கல்வி கட்டணத்தை உயர்த்துவதை அரசு அனுமதிக்காது.

கல்வித்துறையில் தொழில்நுட்பத்தை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து ஆய்வு செய்ய கல்வித்துறை நிபுணர் குழு ஒன்று அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு 6-ம் வகுப்பு முதல் 10-ம் வகுப்பு வரையில் ஆன்லைன் கற்றலின் சாதக-பாதகங்கள் குறித்து ஆராய்ந்து அறிக்கை வழங்கும்.

தேசிய கல்வி கொள்கை

மேலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரையிலான குழந்தைகளுக்கு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி கல்வி கற்பித்தல் குறித்தும் அந்த குழு அறிக்கை வழங்கும். இந்த நிபுணர் குழு 10 நாட்களில் அறிக்கை வழங்க உள்ளது. தேசிய கல்வி கொள்கை குழுவின் உறுப்பினரான எம்.கே.ஸ்ரீதர் தலைமையில் இந்த நிபுணர் குழு அமைக்கப்பட்டுள்ளது.

இந்த குழுவில் கல்வித்துறையை சேர்ந்த நிபுணர்கள் இடம் பெற்றுள்ளனர். நேரடி வகுப்புகள் நடைபெறாதபோது குழந்தைகளுக்கு எவ்வாறு கல்வி கற்பிப்பது, தொழில்நுட்பத்தை எந்த அளவுக்கு பயன்படுத்த வேண்டும் என்பது குறித்தும் அந்த குழு அறிக்கை வழங்க உள்ளது.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு

கர்நாடகத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு வருகிற 25-ந் தேதி தொடங்குகிறது. இதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் நாங்கள் மேற்கொண்டுள்ளோம். தேர்வு எழுதும் மாணவர்களின் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. நான் அனைத்து கல்வி மாவட்டங்களுக்கும் சென்று, தேர்வு குறித்த ஏற்பாடுகளை ஆய்வு செய்துவிட்டு வந்துள்ளேன்.

எஸ்.எஸ்.எல்.சி. தேர்வை நடத்துவதற்காக நான் இதுவரை 4 ஆயிரம் கிலோ மீட்டர் பயணம் செய்துள்ளேன். நுண்ணிய அளவிலான திட்டத்தை வகுத்துள்ளோம். போக்குவரத்து, சுகாதாரத்துறை, போலீஸ் துறைகளுடன் கல்வித்துறை கைகோர்த்து செயல்படுகிறது. கர்நாடகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும், இந்த தேர்வு நடைபெற வேண்டும் என்று விரும்புகிறார்கள்.

3 முகக்கவசம்

தேர்வு எழுதும் ஒவ்வொரு மாணவருக்கும் 3 முகக்கவசம் கொடுக்கிறோம். அவர்களின் உடல்நிலை குறித்து மருத்துவ ஆய்வுக்கு உட்படுத்துகிறோம். தனியார் பள்ளி வாகனங்களையும் மாணவர்களின் போக்குவரத்துக்கு பயன்படுத்த முடிவு செய்துள்ளோம். இந்த தேர்வை சுமுகமாக நடத்த அனைவரும் ஒத்துழைக்க வேண்டும்.

இவ்வாறு மந்திரி சுரேஷ்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்