கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் ; கலெக்டரிடம் பொதுமக்கள் புகார்

அந்தியூர் அருகே கல்குவாரியில் வெடி வைப்பதால் வீடுகளில் விரிசல் விழுவதாக கலெக்டரிடம் பொதுமக்கள் புகார் கொடுத்தனர்.

Update: 2020-06-09 05:47 GMT
ஈரோடு,

ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் வாரந்தோறும் திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா ஊரடங்கு காரணமாக இந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டு உள்ளதால், பொதுமக்கள் தங்களது கோரிக்கை மனுக்களை கலெக்டர் அலுவலகத்தில் வைக்கப்பட்டு உள்ள பெட்டியில் போட்டுவிட்டு சென்றனர். நேற்றும் கோரிக்கை மனுக்களை கொடுக்க பொதுமக்கள் பலர் வந்திருந்தனர்.

அந்தியூர் அருகே சென்னம்பட்டியில் உள்ள கிட்டம்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில் கூறப்பட்டு இருந்ததாவது:-

எங்களது பகுதியில் 600-க்கும் மேற்பட்டவர்கள் வசித்து வருகிறோம். எங்களது பகுதிக்கு அருகில் உள்ள மஞ்சுக்கல் கரடி பகுதியில் கல்குவாரி ஏலம் விடப்பட்டு உள்ளது. இந்த ஏலம் எடுத்த தனியார் நிறுவனம் சார்பில் கனிம வளங்கள் எடுக்கப்பட்டு எம்-சேன்ட், பி-சேன்ட், ஜல்லி கற்களாக மாற்றி விற்பனை செய்யப்படுகிறது. கனிம வளங்களை வெட்டி எடுப்பதற்காக அதிக சக்தி வாய்ந்த வெடிபொருட்கள் பயன்படுத்தப்படுகிறது. இரவு-பகலாக வெடி வைக்கப்படுவதால் குழந்தைகள், முதியவர்கள் தூங்க முடியாமல் அவதிப்படுகின்றனர்.

வீடுகளில் விரிசல் விழுந்து இடிந்து விழும் சூழ்நிலை இருந்து வருகிறது. அதனால் எங்கள் உயிருக்கும் பாதிப்பு ஏற்படும் நிலை உள்ளது. கனரக வாகனங்கள் அடிக்கடி சென்று வருவதால் புழுதி அதிகமாக பறப்பதுடன், சுவாசிக்க முடியாமல் மூச்சு திணறல் ஏற்படுகிறது. 150 அடி ஆழத்துக்கு கல் குவாரி தோண்டி எடுக்கப்படுவதாலும், வெடிபொருளில் ரசாயனம் பயன்படுத்தப்படுவதாலும் கிணற்றில் உள்ள தண்ணீர் பாதிக்கப்படுகிறது. மேலும், குடிநீர் பற்றாக்குறையும் ஏற்படும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட தனியார் நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுத்து, கல் குவாரிக்கான உரிமத்தையும் ரத்து செய்ய வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் பொதுமக்கள் கூறிஇருந்தனர்.

இதேபோல் கல்குவாரியை ஏலம் எடுத்த நிறுவனத்தின் மீது, தனது நிலத்தில் ஜல்லி கற்களை கொட்டி ஆக்கிரமிப்பு செய்ததாக அண்ணாநகர் காலனியை சேர்ந்த மினியன், மரகதம் ஆகியோர் கோரிக்கை மனுக்களை கொடுத்தனர்.

தூய்மை பணியாளர்கள் சங்க மாநில தலைவர் ஈ.வி.கே.சண்முகம் தலைமையில் தூய்மை பணியாளர்கள் கொடுத்த மனுவில் கூறிஇருப்பதாவது:-

தூய்மை பணியாளர்கள், குடிநீர் வினியோக பணியாளர்கள், மேல்நிலை குடிநீர் தொட்டி ஆபரேட்டர்கள் உள்ளிட்டோருக்கு கொரோனா தடுப்பு பணி சிறப்பு ஊதியமாக ஒரு மாத சம்பளத்தை வழங்க வேண்டும். சுழற்சி முறையில் பணி செய்த அனைவருக்கும், ஒரு வாரம் சம்பளத்துடன் கூடிய விடுப்பு வழங்க வேண்டும். பதிவு செய்த, பதிவு செய்யாத தூய்மை பணியாளர்களுக்கு நலவாரிய நிதி உதவி வழங்க வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஈரோடு கருங்கல்பாளையத்தை சேர்ந்த பொதுமக்கள் கொடுத்த மனுவில், கொரோனா ஊரடங்கு காரணமாக வேலைக்கு செல்லாமல் இருந்து வருவதாகவும், தனியார் நிதி நிறுவனத்தை சேர்ந்தவர்கள் கடனை கேட்டு மிரட்டுவதால், தவணை தொகையை செலுத்த 6 மாதம் கால அவகாசம் வழங்க உத்தரவிடவேண்டும் என்று கூறிஇருந்தனர்.

மேலும் செய்திகள்