நாகர்கோவிலில் பரபரப்பு கலெக்டர் அலுவலகத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் சாலைப்பணியை தொடங்கக்கோரி தரையில் அமர்ந்து தர்ணா
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார்.;
நாகர்கோவில்,
நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் ஆஸ்டின் எம்.எல்.ஏ. போராட்டம் நடத்தினார். அவர், சாலைப்பணியை தொடங்க வலியுறுத்தி தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
போராட்டம்
அகஸ்தீஸ்வரம் பஞ்சாயத்து யூனியனுக்கு உட்பட்ட கரும்பாட்டூர் ஆரம்பப்பள்ளி சாலை பழுதடைந்து கிடந்தது. இந்த சாலையை சீரமைத்து கோரி அப்பகுதி பொதுமக்கள் ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர். அதைத்தொடர்ந்து அவர் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி பொதுநிதியில் இருந்து ரூ.15 லட்சம் செலவில் சாலையை சீரமைக்க ஏற்பாடு செய்ததாக தெரிகிறது.
இந்தநிலையில் கொரோனா ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால் இந்த பணி தொடங்கப்படாமல் கிடப்பில் போடப்பட்டது. இதனால் ஆஸ்டின் எம்.எல்.ஏ. பணியை உடனடியாக தொடங்க வேண்டும் எனக்கோரி அதிகாரிகளிடம் வேண்டுகோள் விடுத்தார். அதன்பிறகும் பணிகள் தொடங்கப்படாததை கண்டித்து கடந்த சில தினங்களுக்கு முன் ஆஸ்டின் எம்.எல்.ஏ. சாலையில் படுத்து அங்கு போராட்டத்தில் ஈடுபட்டார்.
தரையில் அமர்ந்து தர்ணா
அப்போது, ஆஸ்டின் எம்.எல்.ஏ.விடம் பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள் இன்னும் ஓரிரு நாளில் சாலை சீரமைப்பு பணி தொடங்கப்படும் என்று உறுதி அளித்திருந்ததாக கூறப்படுகிறது. அதன்பிறகும் சாலைப்பணிகள் தொடங்கப்படாததால் நேற்று ஆஸ்டின் எம்.எல்.ஏ. நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தார்.
அவர் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் அலுவலக அதிகாரிகளை சந்தித்து பேச காத்திருந்தார். அப்போது அவர் திடீரென திட்ட இயக்குனர் அலுவலகம் முன்புறம் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார். இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது.
சாலைப்பணி இன்று தொடக்கம்
இதுபற்றிய தகவல் அறிந்த ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் (பொறுப்பு) அதிகாரி அங்கு வந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது அவர் கரும்பாட்டூரில் சம்பந்தப்பட்ட சாலைப்பணிகள் நாளை (அதாவது இன்று) தொடங்கப்படும் என்று உறுதி அளித்தார். இதையடுத்து ஆஸ்டின் எம்.எல்.ஏ. தனது போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றார்.
அத்துடன், இன்று (செவ்வாய்க்கிழமை) சாலைப்பணியை தொடங்காவிட்டால் கரும்பாட்டூரில் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என ஆஸ்டின் எம்.எல்.ஏ. நிருபர்களிடம் தெரிவித்தார்.