விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஆர்ப்பாட்டம் மயிலாடுதுறையில் பரபரப்பு

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

Update: 2020-06-09 00:08 GMT
குத்தாலம், 

மயிலாடுதுறையில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம்

மயிலாடுதுறை தாலுகா அலுவலகம் முன்பு இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக்கல்வி மற்றும் உயர் கல்வியில் இடஒதுக்கீடு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு நாகை வடக்கு மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மண்டல பொறுப்பாளர் வேலுகுபேந்திரன், நாடாளுமன்ற தொகுதி செயலாளர் கதிர்வளவன், ஒன்றிய அமைப்பாளர் மோகன்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் மாநில பொறியாளர் அணி செயலாளர் ஆக்கூர் செல்வரசு, மாவட்ட பொருளாளர் அறிவழகன், முன்னாள் மாவட்ட செயலாளர் ஸ்டாலின், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாநில துணை செயலாளர்கள் ரியாஸ்கான், முஜ்புர்ரகுமான் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

கோஷங்கள்

ஆர்ப்பாட்டத்தில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவம் மற்றும் உயர்கல்வியில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும். அந்தந்த மாநிலங்களில் எண்ணிக்கைக்கு ஏற்ப இடஒதுக்கீடு வழங்க வேண்டும். கொரோனா பேரிடரை பயன்படுத்தி பொது நிறுவனங்களை தனியார் மயமாக்க முயற்சிப்பதை மத்திய அரசு கைவிட வேண்டும். எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு தனியார் துறையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பப்பட்டன. இதில் ஒன்றிய செயலாளர் கனிவண்ணன், மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அன்புச்செல்வன், நகர செயலாளர் பிரபா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மற்றொரு பிரிவினர்

இந்த ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டு இருந்தபோது, அதன் அருகே அதே கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மற்றொரு பிரிவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் மாவட்ட செயலாளரும், மயிலாடுதுறை சட்டமன்ற தொகுதி செயலாளருமான ஈழவளவன் தலைமை தாங்கினார். மாவட்ட சமூக நல்லிணக்க பேரவை செயலாளர் ராஜமோகன், ஒன்றிய நிர்வாகி பாரதிவளவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஒரே கட்சியினர் 2 கோஷ்டிகளாக பிரிந்து ஒரே இடத்தில் ஆர்ப்பாட்டம் நடத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையொட்டி மயிலாடுதுறை துணை போலீஸ் சூப்பிரண்டு அண்ணாதுரை தலைமையில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டது. இதற்கிடையில் ஒரு தரப்பினர் ஆர்ப்பாட்டத்தை முடித்து கொண்டு புறப்பட்டு சென்றனர். இதனால் மோதல் அபாயம் தவிர்க்கப்பட்டு அமைதி திரும்பியது.

நாகை

இதேபோல் நாகை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு விடுதலை சிறுத்தை கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட செயலாளர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். நாகை சட்டசபை தொகுதி செயலாளர் அறிவழகன் முன்னிலை வகித்தார்.

மேலும் செய்திகள்