திருமருகல் அருகே கூலித்தொழிலாளி வெட்டிக்கொலை உடலை எரித்துவிட்டு தப்பி ஓடியவர்களுக்கு வலைவீச்சு

திருமருகல் அருகே கூலித்தொழிலாளியை வெட்டிக்கொன்று உடலை எரித்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

Update: 2020-06-08 23:56 GMT
திட்டச்சேரி, 

திருமருகல் அருகே கூலித்தொழிலாளியை வெட்டிக்கொன்று உடலை எரித்து விட்டு தப்பி ஓடியவர்களை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

வெட்டுக்காயத்துடன் பிணம்

நாகை மாவட்டம் திருமருகல் அருகே உள்ள திருப்புகலூர் ஊராட்சி மேலப்பகுதியை சேர்ந்தவர் தமிழ்வாணன்(வயது 55). கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி சுதா. கடந்த சில நாட்களுக்கு முன்பு தமிழ்வாணன் திடீரென மாயமானார். அவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடி வந்தனர்.

இந்த நிலையில் நேற்று தமிழ்வாணன் அப்பகுதியில் உள்ள முட்டக்கண்ணி என்ற குளத்தில் கழுத்தில் வெட்டுக்காயத்துடன் பிணமாக கிடந்தார். அவருடைய உடல் தீ வைத்து எரிக்கப்பட்டு இருந்தது.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டுகள் முருகவேல், அர்ச்சனா, நாகூர் இன்ஸ்பெக்டர் ராதாகிருஷ்ணன், திட்டச்சேரி சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று உடலை கைப்பற்றி மருத்துவ பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக திட்டச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து தமிழ்வாணனை வெட்டிக்கொன்று உடலை எரித்து விட்டு தப்பி ஓடியவர்களை வலைவீசி தேடி வருகிறார்கள். மேலும் அவர் எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். கூலித்தொழிலாளியை கொன்று அவரது உடல் எரிக்கப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்