தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன? கலெக்டர் கோவிந்தராவ் பேட்டி

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன? என கலெக்டர் கோவிந்தராவ் விளக்கம் அளித்துள்ளார்.;

Update: 2020-06-08 22:31 GMT
தஞ்சாவூர், 

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்று அதிகரிக்க காரணம் என்ன? என கலெக்டர் கோவிந்தராவ் விளக்கம் அளித்துள்ளார்.

பேட்டி

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கோவிந்தராவ் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தஞ்சை மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் வெளிமாவட்டங்கள், வெளிமாநிலங்களில் இருந்து தஞ்சைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இவர்களை கண்காணிக்க 8 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இங்கு போலீசார், வருவாய்த்துறை, சுகாதாரத்துறை அதிகாரிகள் கொண்ட குழுவினர் பணியில ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பிற பகுதிகளில் இருந்து வருபர்களை பரிசோதனை செய்கின்றனர்.

இவர்களின் பரிசோதனை முடிவுக்கு ஏற்ப கொரோனா அறிகுறி தென்பட்டால் அவர்கள் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். கொரோனா அறிகுறி இல்லாதவர்கள் அவரவர் சொந்த வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தி தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

அதிகரிப்பு

தஞ்சை மாவட்டத்தில் தற்போது சென்னையில் இருந்து வந்தவர்களில் 48 பேருக்கும், அவர்களுடன் தொடர்புடைய ஒருவருக்கும், வெளிநாடுகளில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கும், வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களில் 4 பேருக்கும், வெளிமாவட்டத்தில் இருந்து வந்தவர்களில் 2 பேருக்கும், டெல்லி மாநாட்டிற்கு சென்று வந்தவர்கள் மற்றும் அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் 56 பேருக்கும் என மொத்தம் 113 பேருக்கு கொரோனா தொற்று இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இவர்களில் 88 பேர் குணம் அடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

வெளிநாடு, வெளிமாநிலம், வெளிமாவட்டங்களில் இருந்து தஞ்சை மாவட்டத்திற்கு 4 ஆயிரத்து 370 பேர் வந்துள்ளனர். இவர்கள் தனியார் கல்லூரியிலும், அவரவர் வீடுகளிலும் தனிமைப்படுத்தி வைக்கப்பட்டுள்ளனர். பிற பகுதிகளில் இருந்து தஞ்சைக்கு வருபவர்களால் தான் கொரோனா தொற்றால் பாதித்தவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. பிற பகுதிகளில் இருந்து வருபவர்கள் தங்களை கட்டாயமாக தனிமைப்படுத்தி கொள்ள வேண்டும். இவர்கள் வீட்டைவிட்டு வெளியே வருவதை குடும்பத்தில் உள்ளவர்கள் தடுத்து நிறுத்த வேண்டும். ஊரடங்கு தளர்வு செய்யப்பட்டுள்ளதால் மக்கள் நடமாட்டம் அதிகமாக இருப்பதால் மிக கவனமுடன் இருக்க வேண்டும்.

மக்கள் ஒத்துழைப்பு

வெளியே செல்லும் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும். கைகளை அடிக்கடி நன்றாக கழுவ வேண்டும். மக்கள் ஒத்துழைப்பு கொடுத்தால் தான் கொரோனா தொற்று பரவுவதை தடுக்க முடியும். இல்லையென்றால் பரவுவதை தடுக்க முடியாது.

தஞ்சை மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிக்க போதுமான அளவு படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் மட்டும் 1,000 படுக்கைகள் தயாராக உள்ளன.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்