வேலூர் மாவட்டத்தில் டாக்டர் தம்பதி உள்பட 8 பேருக்கு கொரோனா

வேலூர் மாவட்டத்தில் டாக்டர் தம்பதி உள்பட 8 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

Update: 2020-06-08 06:09 GMT
வேலூர்,

வேலூரில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் உயர்ந்து கொண்டே செல்கிறது. நேற்று முன்தினம் நிலவரப்படி 106 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டிருந்தது. இந்த நிலையில் நேற்று 8 பேருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

அதன்படி வேலூர் சி.எம்.சி. மருத்துவமனை50 வயது டாக்டருக்கும், அவரது மனைவி 44 வயதுடைய டாக்டருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அவர்கள் அங்குள்ள குடியிருப்பில் தங்கி உள்ளனர். இவர்களின் மகனுக்கு ஏற்கனவே பாதிப்பு ஏற்பட்டிருந்ததால் அவரின் மூலம் இவர்களுக்கு பரவி உள்ளது. இவர்கள் சிகிச்சை அளித்த நோயாளிகளுக்கு தொற்று பரவி உள்ளதா? என சுகாதாரத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் இருவரும் சி.எம்.சி. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

வேலூர் சுப்பிரமணிய சாமி கோவில் தெருவை சேர்ந்த 69 வயது ஆணும் பாதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நீரிழிவு நோய் உள்ளதால் பல்வேறு மருத்துவமனைகளுக்கு சென்று வந்துள்ளார். அப்போது அவருக்கு தொற்று ஏற்பட்டிருக்கலாம் என சுகாதாரத்துறை அதிகாரிகள் கருதுகின்றனர். மேலும் தோட்டபாளையத்தை சேர்ந்த 77 வயதுடைய ஆண், ஓட்டேரியை சேர்ந்த 33 வயதுடைய ஆண், கரிகிரியை சேர்ந்த 41 வயதுடைய ஆண், குடியாத்தம் காமாட்சியம்மன் கோவில் தெருவை சேர்ந்த 29 வயதுடைய ஆண், வேலூர் காகிதப்பட்டறையை சேர்ந்த 28 வயது பெண் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

இவர்கள் 8 பேருடன் பழகியவர்கள் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். நேற்று முன்தினம் பாதிப்புக்குள்ளான 29 பேரின் குடும்பத்தினர் மற்றும் நெருங்கிய தொடர்புடையவர்கள் 120 பேர் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் செய்திகள்