திருப்பூர் மீன் மார்க்கெட்டில் 62 டன் மீன்கள் விற்பனை சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் பரபரப்பு
திருப்பூர் தென்னம்பாளையத்தில் உள்ள மீன் மார்க்கெட்டில் 62 டன் மீன்கள் விற்பனை செய்யப்பட்டது. சமூக இடைவெளியின்றி குவிந்த பொதுமக்களால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பூர்,
திருப்பூர் தென்னம்பாளையம் மார்க்கெட்டில் அமைந்துள்ள மீன் மார்க்கெட்டிற்கு தமிழ்நாட்டின் கடலோர பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா, கேரளா ஆகிய மாநிலங்களில் இருந்தும் மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. தற்போது கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீன்வரத்து மிகவும் குறைந்து விட்டது.
வார நாட்களில் தினசரி 40 டன் மீன்களும், சனி, ஞாயிற்றுக்கிழமை போன்ற விடுமுறை நாட்களில் 60 டன் வரையும் விற்பனையாகி வந்த நிலையில் தற்போது ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டுமே அதிக அளவில் விற்பனையாகிறது. அந்த வகையில் நேற்று முன்தினம் தமிழகத்தின் கடலோர பகுதிகளில் மற்றும் ஆந்திராவில் இருந்து வளர்ப்பு மீன்கள் என்று மொத்தம் 62 டன் மீன்கள் விற்பனைக்கு வந்திருந்தன.
பொதுமக்கள் கூட்டம்
நேற்று முன்தினம் இரவு 7 மணி முதல் நேற்று காலை 10 மணிவரை மீன்கள் விற்பனை நடைபெற்றது. இதில் கடல் மீன்களான மத்தி ரூ.200-க்கும், நெத்திலி, அயிலை ரூ.300-க்கும் வஞ்சிரம் சிறியது ரூ.600-க்கும், பெரியது ரூ.900-க்கும், சாலமீன் ரூ.700-க்கும், கிளாத்தி ரூ.350-க் கும், பாறை ரூ.300-க்கும் விலா மீன் ரூ.450-க்கும், வாவல் ரூ.900-க்கும் விற்பனை செய்யப்பட்டது. வளர்ப்பு மீன்களான கட்லா ரூ.180-க்கும், லோகு ரூ.150-க்கும், மிருகால் ரூ.140-க்கும் அணைப்பாறை ரூ.130-க்கும், நெய்மீன் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்பட்டது.
இதுகுறித்து மீன் மொத்த வியாபாரிகள் நிர்வாகிகள் கூறும்போது கடல் மீன்களின் விலை கடந்த வாரத்தை விட இந்த வாரம் விலை ரூ.100 வரை அதிகரித்தும், வளர்ப்பு மீன்கள் விலை குறைந்தும் இருந்தது.
மொத்த மற்றும் சில்லறை விற்பனையிலும் அனைத்து மீன்களும் விற்று தீர்ந்து விட்டன. விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. பொதுமக்கள் கூட்டமும் அதிக அளவில் இருந்தது என்றனர். குறிப்பாக சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அதிக அளவில் குவிந்ததால் மீன் மார்க்கெட்டில் பரபரப்பு ஏற்பட்டது.