செல்லூர் பகுதியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை மாநகராட்சி கமிஷனர் விசாகன் தகவல்
செல்லூர் பகுதியில் வீடு, வீடாக காய்ச்சல் பரிசோதனை செய்யப்படுகிறது என்று மாநகராட்சி கமிஷனர் விசாகன் கூறினார்.;
மதுரை,
மதுரை மாநகராட்சி கொரோனா தடுப்பு பணியாக செல்லூர் பகுதியில் உள்ள பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் மாத்திரைகள் மற்றும் கபசுர குடிநீர் பொடி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் விசாகன் கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
மதுரை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட 142 வரையறுக்கப்பட்ட குடிசைப் பகுதிகள், 189 வரையறுக்கப்படாத குடிசைப்பகுதிகள் என சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் குடும்பங்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் மாநகராட்சியின் சார்பில் சமூக ஆர்வலர்களின் பங்களிப்புடன் இலவசமாக வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் சூரணப் பொடி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் குடியிருப்போர் சங்கங்களின் மூலம் அந்தந்த குடியிருப்புகளில் உள்ள வீடுகளுக்கு வைட்டமின் மாத்திரைகள் வழங்கப்பட்டு வருகிறது.
சமூக இடைவெளி
அதன்படி மதுரை மாநகராட்சி செல்லூர் பகுதியை 10 பிரிவுகளாக பிரித்து 2 டாக்டர்கள், 10 நர்சுகள், 120 நர்சிங் கல்லூரி மாணவிகள் அடங்கிய களப்பணியாளர்கள் வீடு, வீடாக சென்று காய்ச்சல் குறித்து பரிசோதனை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த பகுதியை சார்ந்த சுமார் 50 ஆயிரம் பொதுமக்களுக்கு மாநகராட்சியின் சார்பில் வீடு வீடாக நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வைட்டமின் மாத்திரைகள், ஜிங்க் மாத்திரைகள், கபசுர குடிநீர் பொடிகள், ஓமியோபதி மாத்திரைகள் ஆகியவை வழங்கப்பட்டு வருகிறது. எனவே பொதுமக்கள் முறையாக மாத்திரைகளை உட்கொள்ள வேண்டும். முக கவசம் அணிந்து சமூக இடைவெளியினை கடைப்பிடிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதைத்தொடர்ந்து அவர் ஜீவா மெயின் ரோடு, நாகம்மாள் கோவில் தெரு, அகிம்சாபுரம், லெனின் தெரு உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மாத்திரைகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மருத்துவ கண்காணிப்பாளர் இஸ்மாயில் பாத்திமா, டாக்டர் கோதை, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.