சிகிச்சைக்கு வந்த போது 2 வயது குழந்தையை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண் - சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் பரபரப்பு

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு வந்த போது 2 வயது குழந்தையை தவிக்கவிட்டு சென்ற இளம்பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2020-06-08 00:32 GMT
சென்னை,

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு, திருவல்லிக்கேணி பகுதியை சேர்ந்த லதா(வயது 36) என்பவர் சிகிச்சைக்கு வந்திருந்தார். அப்போது அவரிடம், ‘இளம்பெண் ஒருவர் தன்னுடைய 2 வயது பெண் குழந்தையை கொடுத்து சிறிது நேரம் பார்த்துக் கொள்ளுங்கள்’ என்று கூறிவிட்டு சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அந்த பெண் வராததால் குழந்தையுடன் லதா, ஆஸ்பத்திரி போலீஸ் நிலையத்துக்கு சென்று நடந்ததை கூறினார்.

குழந்தையின் உடலில் தீக்காயம் இருந்ததால் எழும்பூர் குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு போலீசார் அழைத்து சென்றனர். அப்போது இந்த குழந்தைக்கு ஏற்கனவே அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது தெரிய வந்தது. அதனடிப்படையில் போலீசார் நடத்திய விசாரணையில், குழந்தையின் தாய் வேலூர் மாவட்டம் ஆம்பூரை சேர்ந்த ரம்யா(25) என்பது தெரிய வந்தது. இதையடுத்து ஆஸ்பத்திரி பதிவேட்டில் இருந்த அவருடைய செல்போன் எண்ணில் போலீசார் தொடர்புக்கொண்டு பேசினர்.

அப்போது அவர் போலீசாரிடம், ‘அப்பளம் பொறித்த எண்ணெய் சட்டியை எனது கணவர் தட்டி விட்டதால், குழந்தைக்கு தீக்காயம் ஏற்பட்டது. இதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் குழந்தையை அனுமதித்தேன். பின்னர் எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையிலும் குழந்தையை காண்பித்தேன். தற்போது ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை சிகிச்சைக்கு அழைத்து வந்தேன். ஆனால் யாரேனும் தெரிந்த நபர்கள் கூறினால் தான் அனுமதிக்க முடியும் என்று கூறினர். கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் குழந்தை சிகிச்சைக்கு இருந்த போது காவலாளி ஒருவர் பழக்கம் ஆனார். அவரை அழைத்து வர சென்றேன்’ என்று கூறினார். பின்னர் அந்த பெண்ணை வரவழைத்து குழந்தையை பத்திரமாக அவரிடம் போலீசார் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

மேலும் செய்திகள்