மதுரை விமான நிலைய மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 7 பேருக்கு கொரோனா
மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மதுரை,
மதுரை விமான நிலையத்தில் பணிபுரியும் மத்திய தொழில் பாதுகாப்பு படை வீரர் உள்பட 7 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
பாதுகாப்பு படை வீரர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மதுரை அரசு ஆஸ்பத்திரியில் புதிதாக கட்டப்பட்டுள்ள சூப்பர் ஸ்பெஷாலிட்டி ஆஸ்பத்திரியில் சிறப்பு வார்டு அமைத்து சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த நிலையில் சென்னை மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து பார்க்கப்பட்டது. மேலும் மதுரை விமான நிலையத்திற்கு வரும் பயணிகள் மற்றும் அங்கு பணிபுரியும் பாதுகாப்பு படை வீரர்கள், ஊழியர்களுக்கும் அவப்போது பரிசோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்தநிலையில் மதுரை விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 25 வயது வீரர் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதை தொடர்ந்து அவர் தங்கியிருந்த பகுதி முழுவதும் கிருமி நாசினி மூலம் சுத்தம் செய்யும் பணியில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டனர்.
7 பேருக்கு கொரோனா
மேலும் மதுரை மாவட்டம் விளாச்சேரி பகுதியைச் சேர்ந்த 46 வயது ஆண், செல்லூரைச் சேர்ந்த 30 வயது வாலிபர், மேற்கு தெருவைச் சேர்ந்த 55 வயது ஆண், எஸ்.ஆலங்குளத்தைச் சேர்ந்த 72 வயது முதியவர், பெத்தானியாபுரத்தைச் சேர்ந்த 46 வயது பெண், அவரது 25 வயது மகன் ஆகியோருக்குத் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதையடுத்து அவர்கள் 7 பேரும் மதுரை அரசு ஆஸ்பத்திரி கொரோனா சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இதன் மூலம் மதுரையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 298 ஆக உயர்ந்துள்ளது. அதை தொடர்ந்து கொரோனா தொற்றுள்ளவர்கள் வசித்த பகுதிகளில் சுகாதாரத்துறை அதிகாரிகள் கிருமிநாசினி தெளித்தனர். மேலும் அவர்கள் வீடு அமைந்துள்ள பகுதி சீல் வைத்து அடைக்கப்பட்டது.
வீடு திரும்பினர்
இதற்கிடையில் கொரோனா சிறப்பு வார்டில் சிகிச்சை பெற்று வந்த மதுரை மாவட்டம் திருநகர், திருப்பரங்குன்றம், திடீர்நகர், அரும்பனூர், அரசமரத்துப்பட்டி, வெள்ளிமலைப்பட்டி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 12 பேர், தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 2 பேர், விருதுநகர் மற்றும் தேனி மாவட்டங்களைச் சேர்ந்த தலா ஒருவர் என 16 பேர் நோய் தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்து மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வீடு திரும்பினர்.
அவர்கள் அனைவரையும் வீட்டில் தனிமைப்படுத்தி இருக்குமாறு டாக்டர்கள் அறிவுறுத்தி உள்ளனர். மேலும் மதுரை அரசு ஆஸ்பத்திரியில் இருந்து நேற்று வரை மொத்தம் 230 பேர் குணமடைந்துள்ளதாவும், சிகிச்சையில் இருப்பவர்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து வருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்தனர்.