அபுதாபியில் இருந்து சத்தியமங்கலம் வந்தவருக்கு கொரோனா ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்வு
அபுதாபியில் இருந்து சத்தியமங்கலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.;
ஈரோடு,
அபுதாபியில் இருந்து சத்தியமங்கலம் வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் ஈரோடு மாவட்டத்தில் பாதிப்பு எண்ணிக்கை 73 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 72 ஆக இருந்து வந்தது. இதில் ஒருவர் ஏற்கனவே இறந்து விட்டார். 70 பேர் கொரோனா தொற்றில் இருந்து குணம் அடைந்து வீடு திரும்பி உள்ளனர். ஒருவர் மட்டும் சிகிச்சையில் இருந்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று மேலும் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இவர் சத்தியமங்கலத்தை சேர்ந்தவர். அபுதாபியில் வேலை செய்து வந்தார். அவர் அங்கிருந்து சொந்த ஊரான ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலத்துக்கு வருவதற்காக விமானம் மூலம் கோவை வந்தார். அங்கு விமான நிலையத்தில் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில் அவருக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.
73 ஆக உயர்வு
அதைத்தொடர்ந்து அவர் நேற்று ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள அரசு மருத்துவக்கல்லூரி கொரோனா சிறப்பு மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டார். அவர் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார். அவர் நல்ல நிலையில் இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த புதிய பாதிப்பு காரணமாக ஈரோட்டில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை மொத்தம் 73 ஆக உயர்ந்து இருக்கிறது. தற்போது 2 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தினமும் 100-க்கும் மேற்பட்டவர்கள் பெருந்துறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா பரிசோதனை செய்து வருகிறார்கள்.