மானூர் அருகே பல்லிக்கோட்டை கால்வாயில் தூர்வாரும் பணிகள் கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்

மானூர் அருகே பல்லிக்கோட்டை கால்வாய் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

Update: 2020-06-06 23:52 GMT
மானூர், 

மானூர் அருகே பல்லிக்கோட்டை கால்வாய் தூர்வாரும் பணிகளை கலெக்டர் ஷில்பா தொடங்கி வைத்தார்.

ஆக்கிரமிப்பு

மானூர் தாலுகா பல்லிக்கோட்டை கிராமத்தில் பள்ளமடை குளம் அமைந்துள்ளது. இந்த குளத்தின் மூலம் பல்லிக்கோட்டை, பள்ளமடை, அலவந்தான்குளம், நெல்லை திருத்து, புளியங்கொட்டாரம், தென்கலம்புதூர், நல்லம்மாள்புரம் ஆகிய கிராமங்களில் உள்ள நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இந்த நிலையில் களக்குடி பகுதியில் இருந்து குளம் வரை ஆக்கிரமிப்புகள் அதிகமாக உள்ளதாலும், கால்வாய் தூர்வாரப்படாமல் சேதமடைந்த நிலையில் இருந்ததாலும் பள்ளமடை குளத்துக்கு நீர்வரத்து குறைந்தது.

இதுகுறித்து பள்ளமடை குளத்தின் பாசன விவசாயிகள், மாவட்ட கலெக்டரிடம் முறையிட்டனர். அதன் பேரில் தனியார் நிறுவனங்கள் மற்றும் தொண்டு நிறுவனங்கள் சார்பில் எந்திரங்கள் மூலம் கால்வாயை தூர்வார கலெக்டர் ஷில்பா ஏற்பாடு செய்தார்.

கலெக்டர் தொடங்கி வைத்தார்

இதையடுத்து அதற்கான பணிகள் நேற்று தொடங்கப்பட்டன. களக்குடி அருகே நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் ஷில்பா கலந்துகொண்டு, பல்லிக்கோட்டை கால்வாய் தூர்வாரும் பணியை தொடங்கி வைத்தார்.

பயிற்சி கலெக்டர் அலமேல்மங்கை, உதவி கலெக்டர் சிவகுருநாதன், பொதுப்பணித்துறை என்ஜினீயர்கள் மாரியப்பன், மணிகண்டராஜ், அப்துல்ரகுமான், மானூர் தாசில்தார் மோகன் மற்றும் விவசாயிகள் திரளாக கலந்துகொண்டனர்.

இதேபோல் பணகுடி அனுமன் நதியை தூர்வார மதிப்பீடு தயார் செய்யும் பணியை கலெக்டர் ஷில்பா நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். ராதாபுரம் தாசில்தார் செல்வன், பணகுடி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாகுல்ஹமீது உள்பட விவசாயிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்