வடமாநில பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது
வடமாநில பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
கள்ளப்பெரம்பூர்,
வடமாநில பெண்ணை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய சஸ்பெண்டு சப்-இன்ஸ்பெக்டர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாலியல் தொழிலில் வடமாநில பெண்...
தஞ்சையை அடுத்த செங்கிப்பட்டி அருகே சானூரப்பட்டி கடைவீதியில் உடலில் ரத்த காயத்துடன் 20 வயதான மேற்கு வங்காளத்தை சேர்ந்த பெண் கடந்த 1-ந் தேதி நடந்து வந்து கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அந்த பெண்ணை மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதுகுறித்து வல்லம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில், மேற்கு வங்காளத்தை சேர்ந்த அந்த பெண்ணை தஞ்சை மேலவஸ்தாசாவடியை சேர்ந்த செந்தில்குமார்(வயது 49), இவரது மனைவி ராஜம்(49) உள்பட 5 பேர் வீட்டு வேலைக்கு என அழைத்து வந்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்தியதும், சொந்த ஊருக்கு செல்ல அந்த பெண் விரும்பியதால் 5 பேரும் அந்த பெண்ணை காரில் அழைத்துச்சென்று தாக்கி கீழே தள்ளி விட்டதும் தெரிய வந்தது.
5 பேர் கைது
இதையடுத்து வல்லம் துணை போலீஸ் சூப்பிரண்டு சீதாராமன், இன்ஸ்பெக்டர்கள் கார்த்திகேயன், கலைவாணி மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய தனிப்படையினர் தலைமறைவாக இருந்த 5 பேரையும் வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் செந்தில்குமார், அவருடைய மனைவி ராஜம், தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்த பிரபாகர்(62), தண்டாங்கோரை அருகே வெளியாத்துரை சேர்ந்த ராமச்சந்திரன்(40), புதுக்கோட்டை மாவட்டம் கல்லுப்பட்டியை சேர்ந்த பழனிவேல(51) ஆகிய 5 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
இவர்களில் பிரபாகர், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டராக பணிபுரிந்தவர். இவர் பணியில் இருந்தபோது லஞ்சம் வாங்கிய வழக்கில் லஞ்ச ஒழிப்பு போலீசாரால் கைது செய்யப்பட்டு பணியிடை நீக்கம் செய்யப்பட்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.
4 மாதங்களாக நடந்த கொடுமை
கைதானவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் பல்வேறு பரபரப்பு தகவல்கள் வெளியானது. அதன் விவரம் வருமாறு:-
பாலியல் தொழிலில் ஈடுபட மறுத்த வடமாநில பெண்ணுக்கு உணவு வழங்காமல் இவர்கள் 5 பேரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர். மேலும் கட்டாயப்படுத்தி ஒரு நாளைக்கு ஐந்துக்கு மேற்பட்ட ஆண்களுடன் உறவு வைத்துக்கொள்ள கட்டாயப்படுத்தி உள்ளனர். கடந்த 4 மாதங்களாக அவர்கள் இந்த கொடுமையான செயலில் ஈடுபட்டு உள்ளனர்.
இந்த நிலையில் தனது தாய்க்கு உடல்நிலை சரியில்லை என வந்த தகவலையடுத்து ஊருக்கு செல்ல அந்த பெண் முயற்சி செய்துள்ளார். ஆனால் இவர்கள் அந்த பெண்ணை ஊருக்கு அனுப்பாமல் காரில் அழைத்து சென்று அடித்து உதைத்து கீழே தள்ளிவிட்டு சென்று உள்ளனர்.
மேற்கண்ட தகவல்கள் போலீசாரின் விசாரணையில் தெரிய வந்தது.
சொகுசு கார்கள் பறிமுதல்
இதையடுத்து மேலவஸ்தாசாவடியில் உள்ள செந்தில்குமாரின் வீட்டிற்கு போலீசார் ‘சீல்’ வைத்தனர். மேலும் பாலியல் தொழிலுக்கு பயன்படுத்தப்பட்ட 4 சொகுசு கார்கள், 1 மோட்டார் சைக்கிள், 2 ஸ்கூட்டர்கள், 4 செல்போன்கள், ரூ.1 லட்சம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.