கொரோனா பாதிப்பு: பாப்பனப்பட்டில் மத்திய குழு ஆய்வு
விக்கிரவாண்டி அருகே கொரோனா தொற்று பகுதியில் மத்திய அரசின் கண்காணிப்பு அதிகாரி ஆய்வு மேற்கொண்டார்.
விக்கிரவாண்டி,
விக்கிரவாண்டியை அடுத்த பாப்பனப்பட்டு கிராமத்தை சேர்ந்த 22 வயதுடைய வாலிபர் ஒருவர் சென்னையில் தங்கியிருந்து அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இவர் தனது தாயுடன் கடந்த சில நாட்களுக்கு முன்பு சென்னையில் இருந்து சொந்த ஊருக்கு வந்தார்.
இவர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்ததில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு அவர்கள் இருவரும் முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அண்ணாதுரையின் உத்தரவின்பேரில் அவர்கள் வசித்து வந்த பாப்பனப்பட்டு பகுதி தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டு அங்குள்ள பிரதான சாலைகள் சீல் வைக்கப்பட்டுள்ளதோடு அங்குள்ள மக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே எங்கும் செல்லாமல் இருக்கவும், அதுபோல் வெளிநபர்கள் யாரும் அப்பகுதிக்குள் நுழையாமல் இருக்கவும் தடுப்புகள் அமைத்து போலீசார் கண்காணித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று மதியம் மத்திய அரசின் சிறப்பு கண்காணிப்பு அதிகாரியான ராஜேந்திர ரத்னூ தலைமையிலான மத்திய குழு, பாப்பனப்பட்டு கிராமத்திற்கு நேரில் சென்று அந்த கிராமத்தில் மாவட்ட நிர்வாகத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ள நோய் தடுப்பு நடவடிக்கைகளை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர் அதிகாரிகளிடம் கூறுகையில், அப்பகுதியில் உள்ள பொதுமக்களில் யார், யாரெல்லாம் கொரோனா அறிகுறியுடன் உள்ளனர் என்பதை கண்காணித்து அவர்களை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்து பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அதோடு காய்கறிகள், மளிகை பொருட்கள் உள்ளிட்ட அனைத்து அத்தியாவசிய பொருட்களும் முறையாக செல்கிறதா? என்று வருவாய்த்துறை அதிகாரிகள் கண்காணித்து பொருட்கள் தடையின்றி கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்.
மேலும் அப்பகுதி முழுவதையும் அடிக்கடி கிருமி நாசினி திரவத்தால் நன்கு சுத்தம் செய்ய வேண்டும் என்றும் பொதுமக்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வருகிறார்களா? என போலீசார் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். விதியை மீறி வெளியே வருபவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
அப்போது கோட்டாட்சியர் ராஜேந்திரன், துணை போலீஸ் சூப்பிரண்டு சங்கர் ஆகியோர் உடன் இருந்தனர்.