தமிழகத்தில் 23 லட்சம் டன் நெல் கொள்முதல் அமைச்சர் காமராஜ் பேட்டி

தமிழகத்தில் 23 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

Update: 2020-06-06 00:10 GMT
திருவாரூர்,

தமிழகத்தில் 23 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது என திருவாரூரில் அமைச்சர் காமராஜ் கூறினார்.

நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

திருவாரூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஆனந்த் தலைமை தாங்கினார். இதில் அமைச்சர் காமராஜ் கலந்து கொண்டு ரூ.19 லட்சத்து 84 ஆயிரத்து 800 மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

பேட்டி

பின்னர் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் மற்றும் குடிமராமத்து திட்ட பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் அமைச்சர் காமராஜ் தலைமையில் நடைபெற்றது. பின்னர் அமைச்சர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

திருவாரூர் மாவட்டத்தில் சென்னையில் இருந்து வந்தவர்களுக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உள்ளது. அவர்களுக்கும் உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு 7 நாட்களில் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் 23 லட்சத்து 724 டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் 102 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் செயல்பட்டு வருகின்றன. மேலும் டெல்டா மற்றும் டெல்டா அல்லாத பகுதிகளில் 485 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மூலம் நெல் கொள்முதல் நடைபெற்று வருகிறது.

திருவாரூர் மாவட்டத்தில் 38 ஆயிரம் விவசாயிகளுக்கு வட்டியில்லா கடன் ரூ.500 கோடி வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. தமிழக முதல்-அமைச்சர் ஒளிவுமறைவு இல்லாத வகையில் ஆட்சி நடத்தி வருகிறார். எனவே எதிர்க்கட்சிகள் கூறும் குற்றச்சாட்டில் உண்மையில்லை.

நீர்நிலைகள் பராமரிக்கும் பணி

குடிமராமத்து பணிகளை பொறுத்தவரை தூர்வாரும் பணி, குளங்கள் வெட்டும் பணி நடைபெற்றுள்ளது. குறிப்பாக 100 நாள் வேலை மூலம் மனித சக்தியை பயன்படுத்தி நீர்நிலைகள் பராமரிக்கும் பணி நடைபெற்றுள்ளது.

இவ்வாறு அமைச்சர் கூறினார்.

இதில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு துரை, கூடுதல் கலெக்டர் கமல் கிஷோர், நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மணிவண்ணன், சுகாதார பணிகள் இணை இயக்குனர் ராஜமூர்த்தி, துணை இயக்குனர் விஜயகுமார், உதவி கலெக்டர்கள் ஜெயபிரீத்தா, புண்ணியக்கோடி, மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சந்திரமோகன், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் பன்னீர்செல்வம், கூட்டுறவு சங்க செயலாளர்கள் மணிகண்டன், கலியபெருமாள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்