பாலைவன வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்த நடவடிக்கை கலெக்டர் கண்ணன் தகவல்

மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளி தாக்குதல் தொடர்பாக உரிய முன்எச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்படும் என கலெக்டர் கண்ணன் தெரிவித்துள்ளார்.

Update: 2020-06-05 04:45 GMT
விருதுநகர், 

விருதுநகர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பாலைவன வெட்டுக்கிளி தாக்குதலை கட்டுப்படுத்தும் மாவட்ட அளவிலான கண்காணிப்பு குழு கூட்டம் கலெக்டர் கண்ணன் தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் சங்கர் எஸ்.நாராயணன், அருப்புக்கோட்டை, ஸ்ரீவில்லிபுத்தூர் விவசாயத்துறை ஆராய்ச்சி நிலைய பேராசிரியர்கள், வனத்துறை அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

உயர்வு

கூட்டத்தில் பேசிய கலெக்டர் கண்ணன் கூறியதாவது:-

பாலைவன வெட்டுக்கிளிகள் வடமாநிலங்களில் பாதிப்பை ஏற்படுத்தும் நிலை உள்ளது. தமிழகத்தில் குறிப்பாக விருதுநகர் மாவட்டத்தில் கரிசல்மண் காணப்படுவதால் பாலைவன வெட்டுக்கிளிகள் பாதிப்பை ஏற்படுத்த வாய்ப்பு இல்லை என கூறப்படுகிறது. எனினும் வெட்டுக்கிளிகளின் படை எடுப்பை தடுக்கும் நடவடிக்கைகள் மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை விவசாய மற்றும் வனத்துறையினர் மாவட்ட தீயணைப்புத் துறையினர் ஆகியோர் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

நடவடிக்கைகள்

விருதுநகர் மாவட்டத்தில் பாலைவன வெட்டுக்கிளிகளின் நகர்வு குறித்து தொடர் கண்காணிப்பை மேற்கொள்ள வனத்துறை அதிகாரிகள் வனப்பகுதிகளில் கண்காணிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வெட்டுக்கிளிகளின் நடமாட்டம் தென்படும் பட்சத்தில் உடனடியாக மாவட்ட நிர்வாகத்துக்கு தெரிவித்து அதனை உரிய வகையில் ஆவணப்படுத்திடவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். பாலைவன வெட்டுக்கிளிகளின் தாக்குதல் ஏற்படாத வண்ணம் துறைவாரியாக இணைந்து தேவையானஅனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் செய்திகள்