நெல்லையில் முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் கிருமி நாசினி தெளிக்கும் பணி தீவிரம்
நெல்லையில் முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நெல்லை,
நெல்லையில் முககவசம் அணியாத கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
அபராதம்
நெல்லை மாநகருக்கு மும்பை, சென்னை போன்ற நகரங்களில் இருந்து வந்தவர்களால் கொரோனா தொற்று ஏற்பட்டோர் எண்ணிக்கை அதிகரித்து உள்ளது. இதுதவிர மாநகரில் மீண்டும் ஒருசிலருக்கு கொரோனா பரவி உள்ளது. இதை தடுக்க, முககவசம் அணியாமல் வியாபாரம் செய்வோர், வெளியே செல்வோருக்கு மாநகராட்சி அதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.
மேலப்பாளையம் மண்டலத்தில் அண்ணா தெரு, பஜார் தெரு பகுதிகளில் உள்ள கடைகளில் நேற்று மாநகராட்சி அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது முககவசம் அணியாமல் வியாபாரம் செய்த கடைக்காரர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. முககவசம் அணியாமல், முககவசம் விற்பனை செய்த ஒரு வியாபாரிக்கும் அதிகாரிகள் அபராதம் விதித்தனர்.
கிருமி நாசினி தெளிப்பு
இதேபோல் கிருமி நாசினி தெளிக்கும் பணியும் மீண்டும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ள பள்ளிக்கூட வளாகங்களில் நேற்று கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. மேலும் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடைபெறும் மையங்களிலும் ஆய்வு செய்து கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
இதற்கிடையே பாளையங்கோட்டை ஆரம்ப சுகாதார நிலையத்தில் கொரோனா அறிகுறி காணப்படுகிறவர்களுக்கு பரிசோதனை செய்யப்பட்டது.