மருதமலை முருகன் கோவிலில் வைகாசி விசாக திருவிழா மலைக்கு செல்ல அனுமதி இல்லாததால் அடிவாரத்தில் தீபம் ஏற்றி வழிபட்ட பக்தர்கள்

மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலில் வைகாசி விசாக திருவிழா நடைபெற்றது. மலைக்கோவிலுக்கு அனுமதிக்கப்படாததால் அடிவாரத்தில் தீபம் ஏற்றி பக்தர்கள் வழிபட்டனர்.

Update: 2020-06-04 22:29 GMT
வடவள்ளி,

கோவையை அடுத்த மருதமலையில் பிரசித்திபெற்ற சுப்பிரமணிய சுவாமி கோவில் உள்ளது. இது முருகனின் ஏழாம் படை வீடு என்று பக்தர்களால் போற்றப்படுகிறது. இந்த கோவிலுக்கு கோவை மட்டுமன்றி வெளி மாவட்டங்களில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். இது தவிர நாடு முழுவதும் பல்வேறு பகுதிகளில் இருந்து கோவை வரும் சுற்றுலா பயணிகளும் மருதமலைக்கு வந்து சுவாமி தரிசனம் செய்துவிட்டு செல்வது வழக்கம்.

இந்த கோவிலில் ஆண்டுதோறும் தைப்பூசத் திருவிழா, வைகாசி விசாக திருவிழா, பங்குனி உத்திர திருவிழாக்கள் விமரிசையாக நடைபெற்று வருகிறது. கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கை காரணமாக கடந்த மார்ச் மாதம் 24-ந் தேதியில் இருந்து கோவிலில் சாமி தரிசனம் செய்வதற்கு பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது. இதற்கிடையே கோவிலில் வழக்கமான பூஜைகள் தவறாமல் தினமும் நடத்தப்பட்டு வருகிறது.

வைகாசி விசாகத் திருவிழா

இந்தநிலையில் முருக பெருமான் அவதரித்த தினமான வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு நேற்று அதிகாலை 4 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால், பன்னீர், ஜவ்வாது, சந்தனம் உள்பட 16 வகை வாசனை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதை தொடர்ந்து மலர் அலங்காரத்தில் சுவாமி காட்சி அளித்தார். மகா தீபாராதனையை தொடர்ந்து 12 மணிக்கு அபிஷேகம் நடைபெற்றது.

இதையடுத்து சுப்பிரமணிய சுவாமி சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். விழாவை முன்னிட்டு நேற்று மருதமலை அடிவாரத்தில் கோவில் திறந்து இருக்கும் என்ற நம்பிக்கையில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் பக்தர்கள் கோவில் அடிவாரத்துக்கு வந்த வண்ணம் இருந்தனர்.

அடிவாரத்தில் தரிசனம்

மலைக்கோவில் செல்வதற்கு அனுமதி இல்லை என்று கூறி பக்தர்களை அதிகாரிகள் திருப்பி அனுப்பினர். மலைமேல் உள்ள முருகனை தரிசிக்க முடியாவிட்டாலும் அடிவாரத்தில் இருந்து சுவாமி தரிசனம் செய்ய அனுமதி தாருங்கள் என்று பொதுமக்கள் கேட்டுக்கொண்டதால், மலையடிவாரத்தில் உள்ள படிக்கட்டு பகுதியில் பக்தர்கள், முருகப்பெருமானை நினைத்து சூடம் மற்றும் நெய் தீபம் ஏற்றி வழிபாடு செய்தனர்.

மருதமலை அடிவாரத்தில் பழமையான வள்ளி அம்மன் கோவில் உள்ளது. இங்கு வைகாசி விசாகத் திருவிழாவை முன்னிட்டு வள்ளி அம்மனுக்கு 16 வகை திரவியங்களால் அபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடர்ந்து வள்ளியம்மன் சிறப்பு அலங்காரத்தில் காட்சி அளித்தார். இதன்பின்னர் மகா தீபாராதனையும், மதியம் 12 மணிக்கு சிறப்பு தரிசனமும் நடைபெற்றது. இங்கும் கொரோனா வைரஸ் காரணமாக பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்படவில்லை.

மேலும் செய்திகள்