‘அமித்ஷா என் தலைவர்; விரைவில் அவரை சந்திப்பேன்’ பங்கஜா முண்டே பேச்சு

அமித்ஷா என் தலைவர், அவரை விரைவில் சந்திப்பேன் என்று தனது ஆதரவாளர்களுக்கு ஆற்றிய உரையில் முன்னாள் மந்திரி பங்கஜா முண்டே தெரிவித்தார்.;

Update: 2020-06-04 00:59 GMT
மும்பை,

மராட்டியத்தை சேர்ந்த பாரதீய ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான மறைந்த கோபிநாத் முண்டேயின் 6-ம் ஆண்டு நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி அவரது மகளும், பாரதீய ஜனதாவை சேர்ந்த முன்னாள் மந்திரியுமான பங்கஜா முண்டே சமூகஊடகம் வழியாக தனது ஆதரவாளர்களுடன் உரையாடினார். அப்போது அவர் கூறியதாவது:-

நான் மும்பையில் இருக்கிறேன். கொரோனா காரணமாக எனது தந்தையின் நினைவிடம் உள்ள கோபிநாத்காட்டிற்கு செல்ல வேண்டாம் என அரசு நிர்வாகம் என்னை கேட்டுக் கொண்டது.

மராட்டியத்தின் ஒவ்வொரு பகுதிக்கும் சென்று அனைவரையும் சந்திக்க விரும்புகிறேன். கொரோனா நிலைமை சரியானதும் நான் மாநிலத்தில் சுற்றுப்பயணம் செய்வேன்.

அரசியல் இப்போது மாறிவிட்டது. என் எதிரிகள் என்னை இழிவுபடுத்த முயன்றனர். ஆனால் நான் எதுவும் பேசவில்லை. தொடர்ந்து பணியாற்றினேன். அமைதியாக இருப்பது முடிவுகளை எடுக்க உதவுகிறது.

அமித்ஷா என் தலைவர். நாங்கள் அடிக்கடி பேசிக்கொள்கிறோம். விரைவில் அவரை சந்திப்பேன். இவ்வாறு அவர் கூறினார்.

பங்கஜா முண்டே கடந்த ஆண்டு நடந்த சட்டசபை தேர்தலின் போது, தனது உறவினரான தேசியவாத காங்கிரசை சேர்ந்த தனஞ்ெசய் முண்டேயிடம் தோல்வி அடைந்தார். அதன்பின்னர் அவர் கட்சி நடவடிக்கைகளில் இருந்து ஓரங்கட்டப்பட்டு வருவதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன.

அண்மையில் நடந்த எம்.எல்.சி. தேர்தலில் அவருக்கு வாய்ப்பு கொடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் செய்திகள்