திருப்பூரில் சாலையோரம் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்த தொழிலாளி கொலையா? போலீஸ் விசாரணை

திருப்பூரில் சாலையோரம் தொழிலாளி ஒருவர் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Update: 2020-06-03 04:54 GMT
நல்லூர்,

திருப்பூர் தாராபுரம் ரோடு பொன்கோவில் நகரை சேர்ந்தவர் சக்திவேல்(வயது 40). பனியன் நிறுவன தொழிலாளி. இவருடைய மனைவி செல்வி(35). இவர்களுக்கு முகேஸ்வரன்(14), விக்னேஸ்வரன்(13) 2 மகன்கள் உள்ளனர். சக்திவேலுக்கு மதுகுடிக்கும் பழக்கம் உண்டு. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு கோவில்வழி டாஸ்மாக் கடையில் மதுவாங்கி குடித்து விட்டு போதையில் அங்கேயே செல்போன், இருசக்கர வாகனத்துடன் படுத்து தூங்கி விட்டார்.

இது பற்றி சிலர் சக்திவேலுவின் மனைவிக்கு தகவல் தெரிவித்தனர். இது பற்றிய தகவல் அறிந்ததும் மகன் முருகேஸ்வரனுடன் செல்வி, அந்த டாஸ்மாக் கடை அருகே சென்று கணவரை இருசக்கர வாகனத்தில் அழைத்து வந்தார். கருப்பராயன் கோவில் அருகே வந்த போது தான் நடந்து வருவதாக சக்திவேல் கூறி விட்டார். இதனால் சக்திவேலை இறக்கி விட்டு, செல்வி தனது மகனுடன் வீட்டுக்கு சென்று விட்டார். அதன்பின்னர் நீண்ட நேரமாகியும் வீட்டிற்கு சக்திவேல் வரவில்லை. மது போதையில் தூங்கி விட்டார் என வீட்டில் உள்ளவர்கள் நினைத்தனர்.

கொலையா? போலீசார் விசாரணை

இந்த நிலையில் நேற்று காலை அங்கு சென்று பார்த்த போது ரத்த வெள்ளத்தில் சக்திவேல் இறந்து கிடந்தார். அவருடைய தலையில் பலத்த அடிபட்டு இருந்தது. பிரதான சாலையில் இருந்து சற்று தொலைவில் அவருடைய உடல் கிடந்தது. இது பற்றிய தகவல்அறிந்ததும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று அவருடைய உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். சக்திவேல் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வாகனம் மோதி இறந்தாரா? என பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னரே தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்