தடை உத்தரவை மீறி போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்ட தி.மு.க.வினர் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் இன்பதுரை எம்.எல்.ஏ. தலைமையில் சூப்பிரண்டிடம் மனு
ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தலைமையில் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
நெல்லை,
ராதாபுரம் சட்டமன்ற உறுப்பினர் இன்பதுரை தலைமையில் அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் அந்தோணி அமல்ராஜா, வக்கீல் பழனிசங்கர் ஆகியோர் நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனாவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், “பழவூர் போலீசில் குமாரிபகவதி கொடுத்த புகாரில் குற்றம் சாட்டப்பட்டவர்களை கைது செய்யவேண்டும். அவர்களிடம் உள்ள துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்யவேண்டும். வக்கீல் பழனிசங்கர் மீது ஒரு தவறான புகாரை திசையன்விளை போலீசில் தி.மு.க.வினர் கொடுத்து வழக்குப்பதிவு செய்ய கூறி உள்ளனர். இதற்காக தி.மு.க.வினர் 144 தடை உத்தரவை மீறி 50 பேர் ஊர்வலமாக சென்று போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டுள்ளனர். அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்“ என்று கூறப்பட்டுள்ளது.
சூப்பிரண்டு அலுவலகத்திற்கு அ.தி.மு.க.வினர் சென்ற நேரத்தில், தி.மு.க.வினரும் அங்கு வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆயுதப்படை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. போலீசார் சூப்பிரண்டு அலுவலகத்தில் இருந்தவர்களை வெளியே செல்லுமாறு கூறினார்கள்.
இதனால் போலீசாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகவல் அறிந்ததும் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் ஆகியோர் வந்து பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்தனர். சூப்பிரண்டு அலுவலகத்திற்கு வெளியே பாளையங்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சோமசுந்தரம், சப்-இன்ஸ்பெக்டர் மகேஷ் ஆகியோர் தலைமையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.