கோவையில் தொழிலாளி கல்லால் அடித்து கொலை தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய உறவினர் கைது
கோவையில் தொழிலாளியை அடித்து கொலை செய்து விட்டு, தவறி விழுந்து இறந்ததாக நாடகமாடிய உறவினரை போலீசார் கைது செய்தனர்.
போத்தனூர்,
கோவை சீரபாளையம் அரிஜனகாலனியை சேர்ந்தவர் சக்திவேல் (வயது 47). கூலித் தொழிலாளி. இவரது மனைவி மரகதம். சக்திவேல் கடந்த 30-ந் தேதி வேலைக்கு சென்றுவிட்டு வீட்டுக்கு வரும்போது மதுபோதையில் கீழே விழுந்து இறந்துவிட்டதாக மரகதம் மதுக்கரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சந்தேக மரணம் என்று போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். ஆனால் பிரேத பரிசோதனையில் அவர் அடித்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அடித்து கொலை
இதைத் தொடர்ந்து போலீசார் சக்திவேலின் மனைவி மற்றும் உறவினர்களிடம் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர். விசாரணையில் சக்திவேலுக்கும், அவரது தம்பி வடிவேலுக்கும் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருந்தது தெரியவந்தது. இந்தநிலையில் கடந்த 30-ந் தேதி சக்திவேல் வேலைக்கு சென்று வீடு திரும்பி உள்ளார்.
அப்போது அங்கு வடிவேலும், மரகதத்தின் தங்கை கணவரான சுரேஷ் என்பவரும் வந்தனர். அப்போது வடிவேலுக்கும், சக்திவேலுக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரமடைந்த சக்திவேல், வடிவேலை தாக்கியதாக தெரிகிறது. அப்போது அங்கு இருந்த சுரேஷ் கல்லை எடுத்து சக்திவேலை ஓங்கி அடித்து உள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
உறவினர் கைது
இந்த கொலையை மறைப்பதற்காக மரகதம் மற்றும் அவருடைய உறவினர்கள் அனைவரும் சேர்ந்து சக்திவேல் தவறி விழுந்து இறந்துவிட்டதாக நாடகம் ஆடியது விசாரணையில் கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து தலைமறைவாக இருந்த சுரேசை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.