நொறுங்கிப்போன நொறுக்குத்தீனி தயாரிப்பாளர்கள்
கொரோனா ஊரடங்கால் போதிய விற்பனை இல்லாததால் நொறுக்குத்தீனி தயாரிப்பாளர்கள் நொறுங்கி போனார்கள்.;
போடிப்பட்டி,
சந்தைக்குப்போய் விட்டு திரும்பி வரும் தந்தை வாங்கி வரும் பொரிகடலைக்கும், அரிசி முறுக்குக்கும், இனிப்பு பலகாரங்களுக்கும் சிறுகுழந்தைகள் ஆவலாகக் காத்திருந்த காலம் ஒன்று உண்டு. சில வீடுகளில் ஆண்டு முழுவதும் தின்பண்டக்கலயங்கள் தொங்கிக்கொண்டிருக்கும்.அதில் குழிப் பணியாரம், முந்திரி கொத்து, கருப்பட்டி அல்வா, கம்பு அல்வா, சத்து உருண்டை, தொதல், கருப்பட்டி பணியாரம், பாசிப்பருப்பு லட்டு, கம்பு கெட்டி உருண்டை, அரிசி கெட்டி உருண்டை, கேழ்வரகு ஓட்டடை, கடலை இடி உருண்டை, எள் இடி உருண்டை, சாமை அதிரசம், மாப்பிள்ளை சம்பா அதிரசம், பனைவெல்ல அதிரசம், இருங்கு சோள முறுக்கு, குதிரைவாலி முறுக்கு, மாப்பிள்ளை சம்பா முறுக்கு, காட்டுயானம் வெண்ணெய் முறுக்கு, சீரக சம்பா நெய் முறுக்கு, தினை தட்டை, மாப்பிள்ளை சம்பா தட்டை, மாப்பிள்ளை சம்பா காரப்பொரி, கருப்பட்டி கடலை மிட்டாய், தினை லட்டு, கம்பு லட்டு, கொள்ளு லட்டு, அவல் லட்டு, ஐந்தினை லட்டு, சாமை முறுக்கு, சாமை தட்டை, கேழ்வரகு அல்வா, பாசிப்பருப்பு லட்டு, எள் கடலை உருண்டை, மாப்பிள்ளை சம்பா பொரி உருண்டை, கேழ்வரகு லட்டு, மாப்பிள்ளை சம்பா அவல் என ஏதேனும் ஒரு சத்துள்ள நொறுக்குத்தீனி இருக்கும்.காலப்போக்கில் இத்தகைய சத்துள்ள நொறுக்குத்தீனிகள் எல்லாம் வழக்கொழிந்து போய்விட்டன என்று சொல்லுமளவுக்கு அபூர்வமாகி விட்டன.
வேகம் வேகமாக ஓடிக்கொண்டிருக்கும் அவசர உலகத்தில் வண்ண வண்ணமாக பாக்கெட்டுகளில் அடைத்த நொறுக்குத்தீனிகள் குழந்தைகளை கவர்ந்திழுக்க தொடங்கியது. கண்ணைக்கவரும் வண்ணங்கள், மனதை மயக்கும் விளம்பரங்கள் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் கொடுத்து வயிற்றைக் கெடுத்துக்கொள்ளும் குழந்தைகள் ஏராளம். இந்தநிலையில் ஆபத்தற்ற முறுக்கு, மிக்சர், கடலை மிட்டாய் போன்ற நொறுக்குத்தீனிகளை உற்பத்தி செய்து வரும் சுய தொழில் செய்பவர்களின் நிலை சிரமமானதாகவே உள்ளது. மேலும் தற்போது உலகையே உலுக்கி வரும் கொரோனா, ஊரடங்கு முதல் உலக அடங்கு வரை பல நெருக்கடிகளைக் கொடுத்துள்ளது.கோடிகளில் முதலீடு செய்யும் பெரும் தொழில்கள் முதல் சிறிய முதலீட்டில் செய்யப்படும் சிறுதொழில் வரை அனைத்தும் கொரோனாவின் ஆட்டத்தால் ஆடிப்போய் உள்ளது.பல லட்சக்கணக்கான தொழிலாளர்கள் வாழ்வாதாரத்தை இழந்து சொந்த ஊர்களை நோக்கி பயணம் செய்து வருகிறார்கள்.
வாழ்வாதாரம் பாதிப்பு
இத்தனை இடர்களை பொதுமக்களுக்கு உருவாக்கி வரும் கொரோனா ஊரடங்கு சுய தொழிலாய், குடிசைத்தொழிலாய் செய்யப்பட்டு வரும் நொறுக்குத்தீனி உற்பத்தியையும், உற்பத்தியாளர்களின் வாழ்வாதாரத்தையும் நொறுக்கிப் போட்டுள்ளது. உடுமலை சுற்றுவட்டாரப்பகுதிகளில் பல குடும்பத்தினர் இத்தகைய நொறுக்குத்தீனி உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
முறுக்கு, மிக்சர், காராசேவு போன்ற காரவகைகள் உற்பத்தி, உப்புட்டு, பணியாரம், அதிரசம் போன்ற இனிப்பு வகைகள் உற்பத்தி என பல வகை நொறுக்குத்தீனிகளை சிறிய அளவில் தயாரித்து வீடுகள் மற்றும் கடைகளுக்கு வினியோகித்து வருகின்றனர். கொரோனாவால் விதிக்கப்பட்டுள்ள ஊரடங்காலும், மக்கள் கையில் பணப்புழக்கம் குறைந்துள்ளதாலும் தங்கள் தொழில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக நொறுக்குத்தீனி தயாரிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-
வியாபாரம் குறைவு
கொரோனா முதல்கட்ட, 2-ம் கட்ட ஊரடங்கு காலங்களில் ஒட்டுமொத்த நொறுக்குத்தீனி உற்பத்தியும் நிறுத்தப்பட்டிருந்தது.ஆனால் பொதுமக்கள் அனைவரும் வீடுகளுக்குள்ளேயே முடங்கிக்கிடந்தனர். இதனால் நொறுக்குத்தீனிக்கான தேவை அதிகரித்தது.ஆனால் அத்தியாவசியப்பொருட்களுக்கான கடைகள் மட்டுமே திறக்கப்பட்டிருந்த நிலையில் நொறுக்குத்தீனிகளுக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டது.அந்தநேரத்தில் பல வீடுகளிலும் விதவிதமான பாரம்பரிய மற்றும் புது ரக நொறுக்குத்தீனிகளை யூ-டியூபில் பார்த்து செய்யத்தொடங்கினர். அது பல வீடுகளில் இப்போது வரை தொடர்கிறது.
இந்தநிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டதால் தற்போது நொறுக்குத்தீனி உற்பத்தியைத் தொடங்கியுள்ளோம். ஆனால் வியாபாரம் மிகக்குறைவாகவே உள்ளது. இதற்கு கொரோனா குறித்த அச்சம் காரணமா அல்லது மக்கள் புதுவித நொறுக்குத்தீனிகளை ரசிக்கத் தொடங்கி விட்டது காரணமா என்று தெரியவில்லை. ஆனால் மாவு, எண்ணெய் உள்ளிட்ட மூலப்பொருட்கள் அனைத்தும் விலை உயர்ந்துள்ளது. எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகாதபோது இழப்பு ஏற்படுகிறது.ஆனாலும் விலை உயர்த்த முடியாத நிலையே உள்ளது. கொரோனா ஊரடங்கால் பல நாட்கள் தொழில் செய்ய முடியாமல் வீடுகளுக்குள் முடங்கிக்கிடந்தோம்.இதனால் பொருளாதார ரீதியாக கடும் இழப்பை சந்தித்தோம்.வாங்கிய கடனை திருப்பி செலுத்த முடியாமல் தவித்தவர்கள் பலர்.இந்தநிலையில் தற்போது தொடரும் விற்பனைக்குறைவால் ஒட்டுமொத்த வாழ்வாதாரமும் நொறுங்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதேபோல பல சுவீட்ஸ் ஸ்டால்கள்,பேக்கரிகள் போன்றவையும் சமையல் மாஸ்டர்களுக்கு கொடுக்கும் சம்பளம்,கடை வாடகை போன்றவற்றுக்குக்கூட சம்பாதிக்க முடியாத நிலையில் திணறி வருகின்றன.