2 மாதங்களுக்கு பிறகு விழுப்புரம்- மதுரை இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது

2 மாதங்களுக்கு பிறகு விழுப்புரம்- மதுரை இடையே ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதனால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

Update: 2020-06-02 04:59 GMT
விழுப்புரம்,

கொரோனா பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. இந்த உத்தரவினால் கடந்த 2 மாதத்திற்கும் மேலாக பஸ், ரெயில்கள் உள்ளிட்ட வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் ஜூன் 1-ந் தேதி முதல் நாடு முழுவதும் ரெயில் போக்குவரத்து தொடங்கும் என்றும் முதல்கட்டமாக 200 ரெயில்கள் இயக்கப்படும் என்றும் மத்திய அரசு அறிவித்தது. ஆனால் தமிழகத்திற்கு ரெயில் இயக்கப்படுவது குறித்து எந்த அறிவிப்பும் இடம்பெறவில்லை.

இதனிடையே தமிழகத்தில் கொரோனா பாதிப்பு உச்சத்தில் உள்ள சென்னையை தவிர மற்ற மாவட்டங்களில் ரெயில்களை இயக்கலாம் என்று தென்னக ரெயில்வேக்கு தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடிதம் எழுதியிருந்தது. இதனை தொடர்ந்து தமிழகத்தில் கோவை- மயிலாடுதுறை (செவ்வாய்க்கிழமை தவிர), மதுரை- விழுப்புரம் சிறப்பு விரைவு ரெயில், திருச்சி- நாகர்கோவில் விரைவு ரெயில், கோவை- காட்பாடி விரைவு ரெயில் ஆகிய 4 வழித்தடங்களில் ரெயிலை இயக்க ரெயில்வே வாரியம் அனுமதியளித்ததோடு ஜூன் 1-ந்தேதி முதல் இந்த ரெயில்களின் போக்குவரத்து தொடங்கும் என்றும் அறிவித்தது.

அதன்படி நேற்று தமிழகத்தில் ரெயில் போக்குவரத்து தொடங்கியது. இதற்காக கடந்த 2 நாட்களுக்கு முன்பே டிக்கெட் முன்பதிவு தொடங்கியது. பயணிகள் சமூக இடைவெளியை பின்பற்றி டிக்கெட் முன்பதிவு செய்தனர். இதனிடையே இந்த சிறப்பு ரெயில்களில் பயணிக்க இ-பாஸ் கட்டாயம் என்று தென்னக ரெயில்வே நேற்று முன்தினம் அறிவித்தது.

இதனால் முன்பதிவு செய்த பயணிகள் அனைவரும் உடனடியாக இ-பாசில் பயணம் செய்ய ஆன்லைன் மூலம் தங்களது விவரங்களை பதிவு செய்தனர். இதில் ஒரு சிலருக்கு மட்டும்தான் இ-பாஸ் அனுமதி கிடைத்தது. அனுமதி கிடைக்காத பலரும் ரெயிலில் எப்படி பயணம் செய்ய போகிறோம் என்று பெரும் குழப்பத்தில் இருந்தனர். ஆனால் நேற்று முதல் நாள் என்பதால் அந்தந்த ரெயில் நிலையங்களிலேயே இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு உடனடியாக அனுமதி அளிக்க அந்தந்த மாவட்ட நிர்வாகம் ஏற்பாடு செய்தது.

இந்நிலையில் நேற்று காலை 7 மணிக்கு மதுரையில் இருந்து விழுப்புரத்திற்கு சிறப்பு விரைவு ரெயில் புறப்பட்டது. இந்த ரெயில் திண்டுக்கல், திருச்சி, அரியலூர் வழியாக பகல் 12 மணிக்கு விழுப்புரம் ரெயில் நிலையத்தை வந்தடைந்தது. அந்த ரெயிலில் இருந்து 340 பேர் விழுப்புரத்தில் இறங்கினர்.

இவர்களில் 200-க்கும் மேற்பட்டோரிடம் இ-பாஸ் அனுமதி கடிதம் இல்லை. இதனால் இ-பாஸ் அனுமதி பெற்றவர்களும், அனுமதி கிடைக்காதவர்களும் தனித்தனியாக ரெயில் நிலைய நடைமேடைகளில் நிற்க வைக்கப்பட்டனர். முதலாவதாக இ-பாஸ் அனுமதி பெற்ற அனைவருக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் காய்ச்சல் பரிசோதனை செய்யப்பட்டு அவர்களது பயணச்சீட்டு எண், பெயர், முகவரி போன்ற விவரங்களை சேகரித்த பின்னர் அவர்களை அனுப்பி வைத்தனர். அதன் பிறகு இ-பாஸ் கேட்டு விண்ணப்பித்து அனுமதி கிடைக்காதவர்களுக்கு ரெயில் நிலைய நுழைவுவாயிலிலேயே அவர்களுடைய விவரங்களை பதிவு செய்து உடனடியாக அனுமதி வழங்கப்பட்டது. தொடர்ந்து, அவர்களுக்கும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து அனுப்பி வைக்கப்பட்டனர்.

இதனை தொடர்ந்து அந்த ரெயில் மீண்டும் விழுப்புரத்தில் இருந்து மாலை 4 மணிக்கு மதுரைக்கு புறப்பட்டது. இந்த ரெயிலில் பயணம் செய்ய 290 பேர் டிக்கெட் முன்பதிவு செய்திருந்தனர். இவர்கள் இ-பாஸ் அனுமதிக்காக ஆன்லைனில் விண்ணப்பித்திருந்த போதிலும் ஒரு சிலருக்குத்தான் அனுமதி கிடைத்தது.

இருப்பினும் அனைவருடைய விவரங்களையும் ஆன்லைனில் பதிவு செய்து இ-பாஸ் அனுமதி வழங்க மாவட்ட நிர்வாகத்தினால் உடனடி ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பிறகு அவர்கள் அனைவரையும் தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்து ரெயில் பெட்டிகளில் ஏற அனுமதித்தனர்.

22 பெட்டிகளுடன் புறப்பட்ட இந்த ரெயில் அரியலூர், திருச்சி, திண்டுக்கல் வழியாக மதுரைக்கு இரவு 9.15 மணிக்கு சென்றடைந்தது. 2 மாதங்களுக்கு பிறகு ரெயில் போக்குவரத்து தொடங்கியதால் பயணிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

மேலும் செய்திகள்