விருதுகர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இ-பாஸ் இல்லாததால் பெரும் குழப்பம் மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
விருதுநகர் ரெயில் நிலையத்தில் பயணிகளிடம் இ-பாஸ் இல்லாததால் பெரும் குழப்பம் ஏற்பட்டது. இதுகுறித்து மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டது.
விருதுநகர்,
தமிழக அரசு பொது பஸ் போக்குவரத்திற்கு அனுமதி அளித்துள்ள நிலையில் குறிப்பிட்ட மண்டலங்களுக்கு வெளியே உள்ள மாவட்டங்களுக்கு செல்ல இ-பாஸ் பெற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளது. இதற்கிடையில் ரெயில்வேதுறை திருச்சியில் இருந்து நாகர்கோவில் வரை இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரெயிலை நேற்று முதல் இயக்கி வருகிறது. இந்த ரெயிலில் முன்பதிவு செய்த பயணிகள் இ-பாஸ் பெற வேண்டும் என ரெயில்வே நிர்வாகம் நேற்று முன்தினம் தான் உத்தரவு பிறப்பித்தது.
குழப்பம்
இதனால் முன்பதிவு செய்த பயணிகள் ஆன்லைனில் அவர்கள் செல்ல வேண்டிய மாவட்ட நிர்வாகத்திடம் இ-பாஸ் பெற விண்ணப்பித்துள்ளனர். ஆனால் பயண நாளான நேற்று வரை இ-பாஸ் கிடைக்காததால் ரெயில்வே அதிகாரிகள் விருதுநகர் ரெயில் நிலையத்திற்கு ரெயில் ஏற வந்த பணிகளை உள்ளே செல்ல அனுமதிக்க மறுத்து விட்டனர். இதனால் அங்கு பெரும் குழப்பம் ஏற்பட்டது.
அதனை தொடர்ந்து தமிழக அரசு, ரெயில்வே நிர்வாகம் இடையே உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து ரெயில் பயணிகள் நேற்று மட்டும் இ-பாஸ் இல்லாமலேயே ரெயிலில் பயணிக்க அனுமதிக்கப்பட்டனர். அவர்கள் செல்லும் மாவட்டங்களில் உரிய அனுமதி பெற்றுக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டது.
கோரிக்கை
எனவே ரெயில்வே துறையும், மாவட்ட நிர்வாகமும் முன்பதிவு செய்த ரெயில் பயணிகள் ஆன்லைனில் இ-பாஸ் பெற உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கும் போது அவர்களுக்கு தாமதம் இல்லாமல் தகுதி உள்ளவர்களுக்கு உடனடியாக இ-பாஸ் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. இல்லையெனில் ரெயில் நிலையங்களில் குழப்பங்கள் ஏற்படுவது தவிர்க்க முடியாத நிலையாகி விடும்.