மாவட்டம் முழுவதும் பஸ்கள் இயக்கம்: கூட்டம் இல்லாததால் வெறிச்சோடின
மாவட்டம் முழுவதும் நேற்று பஸ்கள் இயங்கின. ஆனால், கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெறிச்சோடின.
மணப்பாறை,
மாவட்டம் முழுவதும் நேற்று பஸ்கள் இயங்கின. ஆனால், கூட்டம் இல்லாததால் பஸ்கள் வெறிச்சோடின.
பஸ்கள் இயக்கம்
கொரோனா வைரஸ் பரவலை தடுக்கும் பொருட்டு கடந்த 2 மாதத்துக்கு மேலாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டும் வாகனங்கள் இயக்கப்பட்டன. இந்நிலையில் சென்னை உள்பட 4 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் 50 சதவீத பஸ்களை இயக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. அதன்படி, நேற்று திருச்சி மாவட்டம் முழுவதும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன.
மணப்பாறையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக பணிமனையில் இருந்து பஸ்கள் இயங்க தொடங்கின. பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. பயணிகள் உடல் வெப்பநிலை பரிசோதனைக்கு பின்னரே உள்ளே செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஒவ்வொரு பஸ்சிலும் சமூக இடைவெளியுடன் பயணிகள் அமர வைக்கப்பட்டனர். பஸ் டிரைவர்கள், கண்டக்டர்கள், பயணிகள் முக கவசம் அணிந்திருந்தனர். முக கவசம் இல்லாமல் வந்தவர்கள் திருப்பி அனுப்பப்பட்டனர். ஆனால், பெரும்பாலான பஸ்களில் கூட்டம் இல்லை.
சமயபுரம்-முசிறி
இதேபோல சமயபுரம், மண்ணச்சநல்லூர் பகுதிகளில் பஸ்கள் இயக்கப்பட்டாலும் அங்கும் பயணிகளின் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது. திருச்சியிலிருந்து சமயபுரத்துக்கு இயக்கப்பட்ட அனைத்து அரசு பஸ்களிலும் ஒருசிலர் மட்டுமே பயணம் செய்ததை காண முடிந்தது.
முசிறி அரசு போக்குவரத்து கழக பணிமனையில் இருந்து நேற்று 29 பஸ்கள் இயக்கப்பட்டன. திருச்சி, மணப்பாறை, தொட்டியம், காட்டுப்புத்தூர், பவித்திரம், மேட்டுப்பாளையம், தா.பேட்டை உள்ளிட்ட பகுதிகளுக்கு அந்த பஸ்கள் சென்றன. முசிறி, தா.பேட்டை பகுதிகளில் வணிக நிறுவனங்கள், கடைகள் அனைத்தும் திறந்திருந்தன.
லால்குடி-தொட்டியம்
திருச்சியில் இருந்து தொட்டியம் வரை இயக்கப்பட்ட புறநகர் பஸ்களில் குறைந்த அளவிலேயே பொதுமக்கள் பயணம் செய்தனர். முசிறியில் இருந்து காட்டுப்புத்தூர் வரை இயக்கப்பட்ட டவுன் பஸ்களிலும் போதிய அளவு பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது.
லால்குடியில் இருந்து இயக்கப்பட்ட அனைத்து பஸ்களிலும், பிற பகுதிகளில் இருந்து லால்குடி வந்த அரசு பஸ்களிலும் கூட்டம் குறைவாகவே இருந்தது. இதேபோல ஜீயபுரம், திருவெறும்பூர், துவாக்குடி உள்பட மாவட்டம் முழுவதும் இயக்கப்பட்ட பெரும்பாலான பஸ்களில் கூட்டம் குறைவாகவே காணப்பட்டது.