கூடலூரில் நடுவழியில் பஞ்சராகி நின்ற அரசு பஸ் பயணிகள் அவதி
கூடலூரில் நடுவழியில் அரசு பஸ் பஞ்சராகி நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர்.
கூடலூர்,
கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் அரசு பஸ் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து 68 நாட்களுக்கு பிறகு நேற்று முதல் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கும் என்று அரசு அறிவித்தது. அதன்படி நீலகிரி மாவட்டத்தில் நேற்று அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது. கூடலூர் அரசு போக்குவரத்துக்கழக பணிமனையில் மொத்தம் 46 பஸ்கள் தயார் நிலையில் இருந்தன. ஆனால் நேற்று 18 பஸ்கள் மட்டுமே இயக்கப்பட்டது.
நடுவழியில் பஞ்சரானது
கூடலூரில் இருந்து கோவை, ஈரோடு, ஊட்டிக்கு குறைந்த எண்ணிக்கையிலான பயணிகளுடன் அரசு பஸ்கள் புறப்பட்டு சென்றன. மேலும் கூடலூரில் இருந்து மசினகுடி, ஓவேலி, பந்தலூர் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. முன்னதாக பஸ்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது. தொடர்ந்து பயணிகளுக்கும் கை கழுவ கிருமி நாசினி வழங்கப்பட்டது. அதன்பின்னரே பஸ்களுக்குள் அமர அனுமதிக்கப்பட்டனர்.
இதற்கிடையில் கூடலூரில் இருந்து ஓவேலிக்கு புறப்பட்ட அரசு பஸ் மதியம் 12.30 மணியளவில் அரசு மேல்நிலைப்பள்ளிக்கு முன்பு நடுவழியில் பஞ்சராகி நின்றது. இதனால் பயணிகள் அவதி அடைந்தனர். அதன்பின்னர் டயர் மாற்றப்பட்டு, பஸ் அங்கிருந்து இயக்கி செல்லப்பட்டது.