குமரியில் நாளை முதல் பஸ்களை இயக்க முடிவு; 380 அரசு பஸ்கள் தயார் நிலையில் உள்ளன

குமரியில் நாளை முதல் பஸ்களை இயக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. நாகர்கோவில் மண்டலத்தில் 380 பஸ்கள் தயார் நிலையில் உள்ளன.;

Update: 2020-06-01 06:44 GMT
நாகர்கோவில்,

தமிழகத்தில் 4-வது கட்ட ஊரடங்கு நேற்று முடிவடைந்தது. 5-வது கட்ட ஊரடங்கு வருகிற 30-ந் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளன. அதேநேரத்தில் இந்த ஊரடங்கில் பல்வேறு தளர்வுகளையும் மத்திய, மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

அதில் ஒன்றாக தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களை 6 மண்டலங்களாக பிரித்து மண்டலங்களுக்குள் மட்டும் பொதுபோக்குவரத்தை இன்று (திங்கட்கிழமை) முதல் தொடங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதன்படி ஒவ்வொரு மண்டலத்துக்குள்ளும் அரசு பஸ்கள் 50 சதவீதம் இயக்கப்பட உள்ளது. இதேபோல் குமரி மாவட்டத்திலும் அரசு பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது. குமரி மாவட்டத்தை தவிர்த்து நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்ட பகுதிகளுக்குள்ளும் அரசு பஸ்களை இயக்க அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.

அதன்படி குமரி மாவட்ட பகுதிகளுக்கும், நெல்லை, தூத்துக்குடி, தென்காசி மாவட்டப் பகுதிகளுக்கும் அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல உயர் அதிகாரிகள் கூறியதாவது:-

ஒவ்வொரு மண்டலத்திலும் 50 சதவீதம் பஸ்களை இயக்க அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டலத்தில் மொத்தம் 760 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் அரசு உத்தரவின்படி 380 பஸ்கள் இயக்கப்பட இருக்கிறது.

நாகர்கோவில் மண்டலத்தில் மொத்தம் 2 ஆயிரத்து 500 டிரைவர்கள், 2 ஆயிரத்து 500 கண்டக்டர்கள் என 5 ஆயிரம் பேர் உள்ளனர். அவர்களில் 50 சதவீதம் பேர் பணிக்கு அழைக்கப்படுவார்கள். அதாவது அவர்களில் 2 ஆயிரத்து 500 டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வருமாறு அழைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ள 2 ஆயிரத்து 500 பேர் மறுநாள் பணிக்கு வரவழைக்கப்படுவார்கள். இவ்வாறு சுழற்சி அடிப்படையில் டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு வந்து செல்வார்கள்.

நாகர்கோவில் மண்டல பஸ்கள் குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட எல்லைகளுக்குள் இயக்கப்படும். ஒரு பஸ்சில் 60 சதவீத பயணிகளை ஏற்றிச் செல்ல வேண்டும் என்றும் அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி ஒவ்வொரு பஸ்சிலும் 50 இருக்கைகள் உள்ளன. அவற்றில் 60 சதவீதம் என்று சொல்லும் 30 பயணிகள் சராசரியாக ஏறி, இறங்கும் வகையில் பஸ்கள் இயக்கப்படும். பஸ் நிலையங்களில் 30 பேர் ஏறாதபட்சத்தில் வழியில் ஏற்றி இறக்கப்படுவார்கள். குமரி மாவட்டத்தில் பஸ்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

கொரோனா பாதுகாப்பு விதிமுறைகளை கடைபிடிக்கும் பொருட்டு டிரைவர், கண்டக்டர்களுக்கு முகக்கவசம், கையுறை, கை சுத்தப்படுத்தும் திரவம் ஆகியவை வழங்கப்பட உள்ளது. ஒவ்வொரு முறை பஸ்கள் நாகர்கோவில் பஸ் நிலையம் மற்றும் மாவட்டப் பகுதிகளில் உள்ள பஸ் நிலையங்களுக்கு திரும்பியதும் பஸ்களின் உட்புறம் மற்றும் வெளிப்புறங்களில் கிருமி நாசினி தெளிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பஸ்கள் ஓடுவது குறித்து குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் வடநேரேவிடம் கேட்டபோது, குமரி மாவட்டத்தில் பஸ் நிலையங்களை காய்கறி சந்தைகளாக பயன்படுத்தி வருகிறோம். அவற்றை திடீரென மாற்ற முடியாது. அதற்கு மாற்று ஏற்பாடுகள் செய்ய வேண்டியது இருக்கிறது.

அதனால் நாளை மறுநாள் (அதாவது நாளை) முதல் பஸ்களை இயக்குவதற்கான முன்ஏற்பாடு நடந்து வருகிறது. மேலும் பஸ்களை இயக்குவது தொடர்பாக குமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 4 மாவட்ட கலெக்டர்களுடன் கலந்துபேசி விட்டு, எத்தனை பஸ்களை ஒவ்வொரு மாவட்டத்திலும் இருந்து இயக்குவது என்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றார். 

மேலும் செய்திகள்