பிரப்பன்வலசை அருகே வியாபாரியிடம் வழிப்பறி; 7 வாலிபர்கள் கைது
பிரப்பன்வலசை அருகே நள்ளிரவில் கறி வியாபாரியிடம் வழிப்பறியில் ஈடுபட்ட 7 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
பனைக்குளம்,
ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் யூனியன் நாகாச்சி தேவர் நகரை சேர்ந்தவர் உருமன் மகன் சிவக்குமார் (வயது 32). கறி வியாபாரம் செய்து வருகிறார். சம்பவத்தன்று இவர் கறி வியாபாரம் செய்வதற்காக நள்ளிரவில் நாகாச்சியில் இருந்து பாம்பனுக்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தாராம். அப்போது பிரப்பன்வலசை சவுக்கு காடு பகுதியில் அவரை மற்றொரு மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் திடீரென வழிமறித்து அவர் அணிந்திருந்த மோதிரம், கை செயின் உள்பட 4 பவுன் தங்க நகைகள், ரூ.5,000, செல்போன் மற்றும் ஆடு வெட்டும் கத்திகள் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிச்சென்று விட்டனராம். இதுகுறித்து சிவக்குமார் உச்சிப்புளி போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின்பேரில் உச்சிப்புளி போலீஸ் இன்ஸ்பெக்டர் முத்துபிரேம் சந்த் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் யாசர் மவுலானா, தங்கச்சாமி மற்றும் போலீசார் அடங்கிய தனிப்படை அமைத்து ராமேசுவரம் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் தேடுதல் வேட்டையை தீவிரப்படுத்தினார்.
7 பேர் கைது
இந்த நிலையில் தனிப்படை போலீசார் நடத்திய விசாரணையில் இச்சம்பவத்தில் ஈடுபட்டது உச்சிப்புளி மரவெட்டிவலசை கிராமத்தை சேர்ந்த களஞ்சியம் மகன் தினேஷ், உச்சிப்புளி சேதுபதி நகரை சேர்ந்த ஏழுமலை மகன் விஜய், காளிதாஸ், மணி மகன் பிரசாந்த், எலந்தைகூட்டம் கிராமத்தை சேர்ந்த தர்மராஜ் மகன் சுதர்சன், கருப்பையா மகன் ராஜா, சித்தார்கோட்டையை சேர்ந்த கோவிந்தராஜ் மகன் அஜய் ஆகியோர் என்பது தெரியவந்தது. இதையடுத்து இவர்கள் 7 பேரையும் போலீசார் கைது செய்து திண்டுக்கல் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீது பல்வேறு குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.