இலங்கைக்கு போதை பொருள் கடத்தல் வழக்கு: முக்கிய குற்றவாளிகள் 4 பேர் கைது
தொண்டியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்தல் வழக்கில் முக்கிய குற்றவாளிகள் 4 பேரை குற்றபிரிவு போலீசார் கைது செய்தனர்.
தொண்டி,
ராமநாதபுரம் மாவட்டம் தொண்டியில் இருந்து இலங்கைக்கு போதை பொருட்கள் கடத்த உள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் போலீசாருக்கு வந்தது. இதையடுத்து ராமநாதபுரம் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண்குமார் உத்தரவின் பேரில் சிறப்பு தனி படையினர் கடந்த சில தினங்களுக்கு முன்பு தொண்டி பகுதியை சேர்ந்த ஒருவரின் படகில் இலங்கைக்கு போதை பொருட்களை கடத்த தயாராக இருந்த முக்கிய குற்றவாளிகளான அப்துல்ரஹீம்(வயது 49) உள்பட 9 பேரை மடக்கி பிடித்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.10 கோடி மதிப்பிலான போதை பொருள், 1½ டன் செம்மர கட்டை மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய ஒரு கார், ஆட்டோ, மொபட்டை பறிமுதல் செய்தனர். அதனை தொடர்ந்து அந்த கும்பலிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.
அவர்கள் அளித்த தகவலின் அடிப்படையில் தனி சிறப்பு படை போலீசார் இந்த கடத்தல் கும்பலுக்கு போதை பொருட்களை சப்ளை செய்த சென்னை அய்யப்பன்தாங்கல் புருசோத்தமன்சோனி(63), திருவள்ளூர் மாவட்டம் நக்கீரன் தெருவை சேர்ந்த ஸ்ரீ தேவன்(60), சிவகங்கை மாவட்டம் இளையான்குடி தாலுகா சாலையூரை சேர்ந்த ஜுல்பிஹார் அலி(34), சென்னை மடிப்பாக்கம் எல்.ஐ.சி. காலனி பத்மாவதி (58) ஆகிய 4 பேரையும் தொண்டி அருகே உள்ள நம்புதாளை பகுதியில் பிடித்து தீவிர குற்றப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் நவநீத கிருஷ்ணன் தலைமையிலான போலீஸ் படையினர் கைது செய்தனர்.
சிறையில் அடைப்பு
கைது செய்யப்பட்ட போதை பொருள் கடத்தல் கும்பலை சேர்ந்த இவர்கள் 4 பேரையும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு வருண் குமார் உத்தரவின் பேரில் திருவாடானை போலீசார் திருவாடானை நீதி மன்றத்தில் ஆஜர் படுத்தினர். நீதிபதி பாலமுருகன் உத்தரவின் பேரில் 4 பேரும் சிறையில் அடைக்கப்பட்டனர்.