இயேசு கிறிஸ்துவின் வல்லமை

இயேசுவுக்கு அன்பானவர்களே.. சமீபத்தில் கிறிஸ்துவின் பிறப்பை கொண்டாடிய நாம், கிறிஸ்துவின் மனநிலையோடு இருப்பதே முக்கியம்.

Update: 2022-01-02 05:48 GMT
‘கிறிஸ்து உங்களுக்குள் இருந்தால் நீங்கள் கடவுளுக்கு ஏற்புடையராவீர்கள்’ என்று, உரோமையர்; 8:10 சொல்லுகிறது. கிறிஸ்துவுக்குள் இருந்த மனநிலை உங்களுக்குள்ளும் இருக்கட்டும் என்று வேதம் சொல்லுகிறது. இயேசு இந்த உலகில் வாழ்ந்தபோது அவருடைய வாழ்க்கையின் நிகழ்வுகள் ஒவ்வொன்றும் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக விளங்கியது. இந்த நாளில் அவற்றைக் குறித்து சிந்தித்து, அவரைப் போல வாழ முயற்சி செய்வோம்

இந்த உலகில் வாழும் நாம் ஒவ்வொருவரும், இந்த உலகம் மிகவும் நல்லவர்கள், நேர்மையானவர்கள், பணக்காரர்கள், படித்தவர்கள் என்று யாரை அடையாளம் காட்டுகிறதே, அவர்களுடனே நட்பு பாராட்ட விரும்புகிறோம், ஆனால் இயேசுவோ, நீதீமான்களை அல்ல பாவிகளையே தேடிவந்தேன் என்று சொல்லுகிறார்; மேலும் (மத்தேயு 9:11) இதைக்கண்ட பரிசேயர் அவருடைய சீடரைப் பார்த்து உங்கள் போதகர் ஆயக்காரரோடும், பாவிகளோடும் உண்பதேன் என்றனர் என்ற வார்தையின் படி, அவர் பல காரணங்களால் பிறரால் புறக்கணிக்கப்பட்டவர்களை தேடி சென்று அவர்களையும் இறைவனின் பார்வைக்கு உகந்தவர்களாய் உயர்த்தி வைத்தார்.

நாம் எப்போதும் சுயநலத்தோடு நம்மைப்பற்றி மட்டுமே சிந்தித்து, கொண்டு இருக்கிறோம். ஆனால் தனது பிறப்பு முதல் இறப்பு மட்டுமல்ல, இயேசு உயிர்த்தெழுந்து விண்ணகம் சென்று இறைவனின் அருகில் வீற்றிருக்கும் இந்நாளிலும், மற்றவர்களின் வாழ்வு உயர வேண்டும், துயரபடுவோர் விடுதலை பெற வேண்டும், உலகில் உள்ள ஒவ்வொருவரும் மீட்பை பெற்று பரலோகத்தை அடைய வேண்டும் என்ற எண்ணத்தோடு பிறருக்கு நன்மை செய்பவராக திகழ்கிறார்.

சீசருக்கு உரியதை சீசருக்கும், கடவுளுக்கு உரியதை கடவுளுக்கும் கொடுங்கள் என்று சொல்லி தனது வரிப்பணத்தை அரசாங்கத்திற்கு செலுத்தியதன் வாயிலாக, ஒவ்வொருவரும் இறை சட்டத்தையும், உலக சட்டத் திட்டங்களையும் மீறாமல் கடைப்பிடித்து நடக்க வேண்டும் என்பதை வெறும் வார்த்தையால மட்டும் அல்ல செயலாலும் வலியுறுத்தி கூறுகிறார்.

பிரச்சினைக்குரிய தருணங்களிலும் இயேசு தனது வல்லமையை அதிகாரத்தையும் பயன்படுத்தாமல் தனது வாழ்விலும், மரணத்திலும் இறைவனின் சித்தத்தை நிறைவேற்றுவதிலே ஆர்வமாய் இருந்தார். அதனால் தான் அவர், ‘‘அப்பா, தந்தையே எல்லாம் உம்மால் இயலும். இத்துன்பக் கிண்ணத்தை என்னிடமிருந்து அகற்றும். ஆனாலும் என் விருப்பப்படி அல்ல; உம் விருப்பப்படியே நிகழட்டும்’’ என்று கூறினார். தந்தையின் விருப்பத்தை நிறைவேற்றுவதில் அவருக்கு இருந்த ஆர்வத்தினால்தான், சாவை ஏற்கும் அளவிற்கு அதுவும் பிறரால் இழிவாக கருதப்பட்ட சிலுவை சாவையே ஏற்கும் அளவிற்கு கீழ்படிந்தார் என்று வேதம் சொல்லுகிறது.

இயேசுவின் பிறப்பும் மாட மாளிகையிலே அல்லது வசதி படைத்த இடத்திலோ இல்லாமல் எளிமையான ஒரு மாட்டுத் தொழுவத்தில் அமைந்தது. அதே போல் அவரது இறப்பிற்கு பிறகு அவர் உடல் வைக்கப்பட்ட இடம் அவருக்கு சொந்ததமானதாக இருக்கவில்லை.

நாம் எல்லாரும் மரணமே நமக்கு வரக்கூடாது என்று விரும்புவோம், ஆனால் இயேசுவோ, மரணம் அடைய வேண்டும் என்றே விரும்பி அதற்காகவே பிறந்தவர். நாம் எல்லாரும் நமக்கு ஒரு பிரச்சினை என்றால் நமது அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்ய முயற்சி செய்வோம். ஆனால் இயேசுவை கைது செய்ய வந்தபோது, இயேசுவின் சீடர் சீமோன் பேதுரு, தனது வாளை உருவி ஒரு போர்வீரரின் காதை வெட்டினார்.

அப்போது இயேசு, சீமோன் பேதுருவை நோக்கி, “உன் வாளை உன் உறையில் போடு. நான் கேட்டால் பன்னிரண்டு பெரும்படைகளை என் தந்தை அனுப்புவார்” என்று சொன்னார். (ஒரு பெரும் படை என்பது 6000 வீரர்களை கொண்டது. அந்த படையில் இருக்கும் ஒரு வீரர், ஒரே இரவில் 1,85,000 எதிரிகளை வீழ்த்தினார் என்று வேதம் சொல்லுகிறது). அந்த இக்கட்டான நிலையிலும், இயேசு தமது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தாமல் தன்னை தாழ்த்தி தந்தையின் சித்தத்திற்கு தம்மையே கையளித்தார்.

இந்த உலகம் பெருமையாக கருதுவதை எல்லாம் ஆண்டவர் வெறுத்து நமக்கு ஒரு உன்னதமான வாழ்வை வெளிப்படுத்தி சென்று இருக்கிறார். எனவே நாமும் இறைவனின் சித்தத்திற்கு முக்கியத்துவம் கொடுத்து, இந்த உலகில் வாழும் ஏழை, எளிய, இந்த சமூகத்தால் புறக்கணித்து தள்ளப்பட்ட மக்களை நேசித்து இயேசு பிறப்பின் உன்னத நோக்கத்தை நமது வாழ்வில் இந்த புத்தாண்டிலிருந்து வெளிப்படுத்துவோம்.

சி.கிறிஸ்டோ, சென்னை.

மேலும் செய்திகள்