விடுமுறையைக் கொண்டாடுவோம்

சும்மா இருந்தாலும் காலமும் நேரமும் ஓடத்தான் செய்யும். காலம் கடந்த பிறகு கடைசி காலத்தில் நாம் வருத்தப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

Update: 2017-05-04 22:30 GMT
கோடைகால விடுமுறை என்றாலே எல்லாருக்கும் கொண்டாட்டம் தான். அதிகாலை எழ வேண்டியதில்லை. அவசர அவசரமாக தயாராக வேண்டியதில்லை. நீண்ட நேரம் தூங்கலாம். ஜாலியாய் இருக்கலாம் என்றுதான் இன்றைய பிள்ளைகளின் பிஞ்சுமனம் நினைக்கிறது.

எப்போதுமே நாம் நமது ஓய்வுநேரங்களையும், விடுமுறை நாட்களையும் வீணாக கழித்துவிடக்கூடாது. சும்மா இருந்தாலும் காலமும் நேரமும் ஓடத்தான் செய்யும். காலம் கடந்த பிறகு கடைசி காலத்தில் நாம் வருத்தப்படுவதில் எவ்வித அர்த்தமும் இல்லை.

எனவே விடுமுறை தினங்களை வீண், விரயமாக்கி விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். அவரவரின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப விடுமுறைகாலப் பயிற்சிகளில் சேர்ந்து அவற்றை கற்றுக்கொள்ள முன்வரவேண்டும். மேலும் குழந்தைகளுக்கு அறிந்துகொள்ளவேண்டிய வாழ்வியல் பயிற்சிகளை அளிப்பது பெற்றோரின் கடமையாகும்.

இந்த நேரத்தில் அவர்களை நாம் எதற்கும் கண்டுக்காமல், எதையும் கண்டிக்காமல் அப்படியே விட்டு விடுவது, அல்லது அவர்களுடன் எங்கும் செல்லாமல் அல்லது, அவர்களை எங்கும் செல்லவிடாமல், அவர்களுடன் எதையும் பேசாமல் அல்லது அவர்கள் எதையும் பேசிவிடாமல் வீட்டுக்குள்ளேயேஅடைத்துவைப்பது, அல்லது வீதியில் அவிழ்த்து விடுவது இரண்டுமே போற்றத்தக்க செயல் அல்ல.

‘பெற்றோர் மீதும், (பெற்றெடுத்த தம்) பிள்ளைகளின் மீதும் சத்தியமாக....’ (90:3) என்பது திருக்குர்ஆன் வசனம் ஆகும்.

அல்லாஹ் எதன் மீதெல்லாம் சத்தியம் செய்து சொல்கிறானோ அதுவெல்லாம் நம் கவனத்திற்குரியது, நம் கண்ணியத்திற்குரியது என்பது திருக்குர்ஆன் விரிவுரையின் பொதுவிதி.

இவ்வகையில் நம் பெற்றோர்களும், பிள்ளைகளும் ஒருவருக்கொருவர் கவனிப்பிற்கும், கண்ணியத்திற்கும் உரியவர்கள் என்பதை என்றும் நாம் மறந்து விடக்கூடாது.

‘எனவே, (வேலைகளிலிருந்து) நீர் ஓய்ந்ததும் (இறைவழியிலும், இறை வணக்கத்திலும்) முயல்வீராக’ (திருக்குர்ஆன் 94:7)

இந்த இறைமறை வசனம் நமக்கு அழுத்தமான, ஆழமான ஒருசெய்தியைச் சொல்கிறது. அதாவது நீங்கள் ஒருசெயலை செய்து முடித்துவிட்டால், அடுத்த ஒரு செயலுக்கு தயாராகி விடுங்கள் என்பதே அது. ஆக ஓய்வு என்பது ஒரு செயலுக்குத்தானே தவிர நமக்கு அல்ல என்பது தெள்ளதெளிவாகவே புரிகிறது. இது இந்த விடுமுறைக்கும் பொருந்தும். நம்ம பிள்ளைகளுக்கும் பொருந்தும்.

‘ஒரு தந்தை தன் பிள்ளைகளுக்குத் தரும் பரிசுகளில் ஆக மிகச் சிறந்தது நல்லொழுக்கமே’ என்றுரைத்தார்கள் நபிகள் நாயகம் அவர்கள்.

அந்த நல்லொழுக்கம் என்பது இதுபோன்ற பயிற்சிகளையும், அதற்கான முயற்சிகளையும் குறிக்கும். ஒழுக்கமான ஒரு வாழ்க்கைக்கு எதுவெல்லாம் துணை நிற்குமோ அதுவும் இன்னொரு நல்லொழுக்கம் தான். பிள்ளைகள் சும்மா இருக்கும் போதுதான் தவறான வழிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அவர்களுக்கென்று ஒரு வேலை வந்துவிட்டால் நிச்சயம் அவர்கள் நல்ல பிள்ளைகளாகத்தான் இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

‘‘அவனையன்றி (வேறு எவரையும்) நீர் வணங்கலாகாது என்றும், பெற்றோருக்கு நன்மை செய்யவேண்டும் என்றும், உம்முடைய இறைவன் விதித்திருக்கின்றான்; அவ்விருவரில் ஒருவரோ அல்லது அவர்கள் இருவருமோ உம்மிடத்தில் நிச்சயமாக முதுமை அடைந்து விட்டால், அவர்களை ‘உஃப்’ (சீ) என்று (சடைந்தும்) சொல்ல வேண்டாம். அவ்விருவரையும் (உம்மிடத்திலிருந்து) விரட்ட வேண்டாம். இன்னும் அவ்விருவரிடமும் கனிவான கண்ணியமான பேச்சையே பேசுவீராக. இரக்கம் கொண்டு பணிவு என்னும் இறக்கையை அவ்விருவருக்காகவும் நீர் தாழ்த்துவீராக; மேலும், ‘என் இறைவனே! நான் சிறு பிள்ளையாக இருந்தபோது, என்னை(ப்பரிவோடு) அவ்விருவரும் வளர்த்தது போல், நீயும் அவர்களிருவருக்கும் கிருபை செய்வாயாக’ என்று கூறிப் பிரார்த்திப்பீராக. (திருக்குர்ஆன் 17:23,24)

இந்த இறைமறை வசனங்கள் சொல்லிக்காட்டுவதில் இருந்தே ஒரு பெற்றோரும், பிள்ளைகளும் எப்படியிருக்க வேண்டும் என்பதை மிகத்துல்லியமாக நாம் எடை போட்டுப்பார்த்துக் கொள்ள முடியும். எனவே நம் பிள்ளைகள் நமக்கு பிரார்த்தனை செய்பவர்களாக மிளிர வேண்டும் என்றால் அவர்களை நாம் மிகச்சரியான ஒரு பாதையில் செலுத்தினால் தான் அவர்கள் மிகச்சரியாக செயல்படுவார்கள். தம் பெற்றோரின் உயர்வு என்ன என்பதைப் புரிந்து கொள்வார்கள்.

அதற்கு இந்த விடுமுறையும் நிச்சயம் துணைபுரியும். இந்த நேரங்களில் நாம் தான் நமது பிள்ளைகளை கண்ணும், கருத்துமாகப் பார்த்துக் கொள்ளவேண்டும். இல்லையெனில் அவர்கள் வெகுசீக்கிரத்தில் வழிதவறிப்போகும் நேரமும் இதுதான்.

எனவே நாம் அதிக அக்கறையுடனும், அதிக கவனமுடனும் இருக்க வேண்டும். பிள்ளைகளும் தம் பெற்றோர் படும் சிரமங் களையும் கஷ்டங்களையும் கொஞ்சமாவது புரிந்து கொண்டு நடக்க வேண்டும். எந்த வாய்ப்புகளுமே ஓரிரு முறைதான் நம் வீட்டுக்  கதவுகளை தட்டும். ஆனால் நாம் தான் நமது கதவை திறப்பதில்லை அல்லது கதவை திறப்பதற்கு வீட்டில் இருப்பதில்லை. இனியேனும் நாம் நமது வீடுகளில் இல்லாவிட்டாலும் நல்ல நல்ல பயிற்சிக் கூடங்களில் இருப்போமே...!

வாருங்கள்...! விடுமுறைகளைப் போற்றுவோம்..! கடுமுறைகளை மாற்றுவோம்...!

மவுலவீ எஸ்.என்.ஆர்.‌ஷவ்கத் அலி மஸ்லஹி, ஈரோடு–3

மேலும் செய்திகள்